உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மாஜி கடவுள்கள்


படி, நம்முடைய மூதாதையர் கட்டி வைத்த புராணத்தை நாம் இன்றும் நம்பி, நடத்துகிற சூரசம்ஹாரத் திருவிழாவைப் பார்த்து, கேலி செய்கிறார்கள்! விண்ணும் மண்ணும், ஒளியும் ஒலியும், இன்று அங்கெல்லாம், ஆராய்ச்சிக்கூடத்திலே உள்ள மக்களால், அலசப்பட்டு, பயன் மிகு பல புதிய நுண்ணறிவு பரப்பப்பட்டு வருகிறது. நாமோ இன்னமும், திரிபுர தகனம் முதற்கொண்டு திருத்துழாய் மகிமை வரையிலே, ஒன்று விடாமல், நம்பியும் புகழ்ந்தும், பாராட்டியும், கெடாதபடி பாதுகாக்க முயற்சித்தும், கீதம், காட்சி, ஓவியம் முதலிய பல சாதனங்களைக்கொண்டு அந்தப் பழமையைக் காப்பாற்றியும் வருகிறோம்! இதுதான் உலகின் அறிவுள்ள பகுதிக்கும் நமக்கும் உள்ள வித்தியாசமேயொழிய, இங்குள்ள சில பரணை மனப் போக்கினர் கூறுவதுபோல, அற்புதமான கற்பனைகளை ஆக்கின திறம் நமது முன்னோர்களுக்கு மட்டுமே உண்டு, உலகில் வேறு எவருக்கும் கிடையாது என்பது உண்மையல்ல! கற்பனைக் கதைகள் கட்டினதிலே, நமது மூதாதையருக்கும் உலகின் வேறு பகுதியிலே இருந்தவர்களுக்கும், வித்தியாசம், அதிகம் கிடையாது. பல தலைச்சாமிகள்! பறக்கும் சாமிகள்! பெண்களைப் பலி கேட்கும் தெய்வங்கள்! பேருருவத் தேவதைகள், போன்ற கற்பனைகளை, எங்கும் எவரும் கட்டித்தான் பார்த்தனர். அங்கெல்லாம், அறிவு பரவியதும், ஆதும்லா, யெமர் போன்ற கற்பனைகளை, விட்டொழித்து, உண்மையை மக்கள் நாடினர். நாமோ, உண்மையைக் காணவேண்டுமே என்ற உணர்ச்சியைக்கூடக் கொள்ளாமல், பழம் கதைகளை இன்னும் பயனுள்ளவை, பொருளுள்ளவை, புனிதமானவை, பாராட்டத்தக்கவை, பூஜிக்கத்தக்கவை, பழுதுபடாதபடி பாதுகாக்கத்தக்கவை என்று எண்ணி ஏமாறுகிறோம். இந்த மகத்தான வித்தியாசந்தான் இருக்கிறது, நமக்கும், உலகின் மற்றப் பகுதிக்கும்.