உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மாஜி கடவுள்கள்


கொடுமைபோல, அந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த அருமையான சாதனங்களை உபயோகித்துக்கொண்டே, அந்த ஆராய்ச்சியாளர்களெல்லாம், ஆத்மார்த்தம் அறியாதவர்கள் அழகிய கற்பனைகள் செய்யத் தெரியாதவர்கள், என்று நையாண்டியும் செய்கிறோம்! நியாயமா? நாம் கண்டுபிடிக்காத, (கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ளாத நாம்) ரயிலில் பிரயாணம் செய்து, எங்கே போகிறோம்? பிள்ளைவரம் கேட்க ராமேஸ்வரமோ முடிதர திருப்பதிக்கோ, பெரியபாளையத்தாளின் பொருளைத் தேடியோ! இந்தப் பழைய சாதனங்களைத் தேடிச் செல்வதற்கு அவர்கள் அளித்த புதிய பொருள்களை உபயோகிக்கிறோம், அப்போதாவது ஒரு துளி நன்றியறிதல்! ஒரு துளி பாராட்டுதல் உண்டா? இல்லை, இல்லை! உழைப்பாளியின் வியர்வையால், பன்னீர் பெறுகிற முதலாளி, பாட்டாளியை எப்படிப் பரிகசிக்கிறானோ, அதேபோலத்தான், புத்தறிவாளர்கள் தரும் சாதனங்களை, வசதிகளை, நன்றாகப் பயன்படுத்திக்கொண்டே, பழைமை விரும்பிகள், அந்தப் புத்தறிவைக் கேவலமாகப் பேசுகின்றனர். புத்தறிவைப் பழிக்கும் புல்லறிவாளர்கள், இன்று, எந்தெந்தக் கற்பனைகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விட மறுக்கிறார்களோ, அந்தக் கற்பனைகளிலே காணப்படும் வாழ்க்கை நிலைக்குச் செல்லச் சம்மதிப்பரா என்றால், சம்மதிக்கமாட்டார்கள்! மின்சார விளக்கு மங்கினால், இவர்களின் கோபம் பொங்கும்! விஞ்ஞானப் பொருள் கிடைக்கத் தடை ஏற்பட்டால், இவர்களின் வாழ்வே மங்கும்! ஆனால் அந்த வசதிகள் தங்கு தடையின்றி, மாற்றார் உற்றார் எனும் பாகுபாடு இன்றி, கிடைக்கிற காரணத்தால், அவைகளை உபயோகித்துக்கொண்டே ‘என்ன பலன் இவைகளால்!’ என்றும் பேசத் துணிகின்றனர்.