உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி

133


மதவாதிகள் விதித்திடும் நிபந்தனைகளைப்போல், விஞ்ஞானிகளும் விதித்தால், வேடிக்கையாக இருக்கும், இத்தகையவர்களின் நிலைமை!

வைணவராக வேண்டுமா? திருநாமம் தரிக்கவேண்டும்! திருப்பாவை படிக்கவேண்டும்! திருத்துழாய் நீர் பருகவேண்டும்! என்று, சில பல நிபந்தனைகள் விதிப்பதுபோல, “ரயிலில் பிரயாணம் செய்யவேண்டுமா?”—“சரி! புத்தறிவின் விளைவு இந்த ரயில்! இதிலேறிச் செல்ல வேண்டுமானால் புத்தறிவு கொள்ளவேண்டும். உனக்கு அந்தப் புத்தறிவு இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று ஆரம்பித்து, ரயிலில் பிரயாணம் செய்ய வருபவரைப் பார்த்து,

“உலகம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டால், அவர்,

“உலகம், தட்டை!” என்று பதில் கூறுவார்—அவருக்குப் பழக்கமான புராணப்பயிற்சி காரணமாக. உடனே, “ஓஹோ! உமக்குப் புத்தறிவின் அடிப்படையே தெரியவில்லை. இந்த ரயில், தட்டையாக இருக்கிற உலகத்தில் ஓடுவதல்ல, உருண்டையாக உள்ள உலகத்தது; உனக்குத்தான் உலகம் உருண்டை வடிவம் என்பதே தெரியாதே, பிடிக்காதே, புரியாதே, அப்படிப்பட்ட, நீ உன் பாட்டன் முப்பாட்டன் கால முதற்கொண்டு இருந்துவந்த பழைய நம்பிக்கையான தட்டை உலகிலே, கட்டை வண்டியில் பயணம் செய்வதே சரியான காரியம். பழங்கால நம்பிக்கையை மறந்த மாபாவிகளான நாங்கள் கண்டுபிடித்த இந்த நவீனப் பைசாசத்தின் உதவியை நாடாதே!” என்று கூறி, டிக்கட் தர மறுத்தால், வேடிக்கையாக இருக்கும்.