உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மாஜி கடவுள்கள்


பத்தியமில்லாத மருந்துபோல, உரித்த சுளைபோல, நிபந்தனையற்ற நிலையில், சகல விஞ்ஞான வசதிகளும், பாடுபடாதவருக்கு மிகமிகச் சுலபத்திலே, தரப்பட்டு விட்டதால், அவைகளின் பயனை அனுபவிக்கும் நேரத்திலும்கூட. பழமைக்குப் பாராட்டும் போக்கு இருந்து வருகிறது. பாடுப்பட்டுத் தேடாத பொருள், அருமை தெரியக் காரணம் இல்லையல்லவா! இதனாலேதான், புத்தறிவை அலட்சியமாகப் பேசும் புல்லறிவு தலை விரித்தாடுகிறது. ரயிலேறி ராமேஸ்வரம் போவதும், ரோடரிமிஷினில் ரமணர் நூல் அச்சாவதும், ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும், காமிரா கொண்டு கருடசேர்வையைப் படம் பிடிப்பதும், டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும்,—இவை போன்றவைகள், இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இந்த நிலை சரியா? பல் துலக்குவதற்குத் தயாரிக்கப்படும் பசையை பாத்திரம் துலக்கப் பயன்படுத்தினால்—கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குரிய துப்பாக்கியைக்கொண்டு எலியைக் கொல்லக் கிளம்பினால்;—என்ன எண்ணுவர்—என்ன கூறுவர்! அதுபோல, புத்தறிவு, புதிய வாழ்வுக்கு வழி செய்ய ஏற்பட்டிருகக அந்தப் புத்தறிவு தரும் சாதனங்களைக்கொண்டு, பழைய வாழக்கையை நடத்த முற்படுபவரைப் பற்றி, என்ன எண்ணுவது, என்ன கூறுவது! ஏன் அவர்கள், இத்தகைய போக்குக் கொள்கின்றனர்! அதற்குள்ள பல காரணங்களிலே ஒன்று, பழைய காலக் கற்பனைக் கதைகள் நமது மூதாதையரின் அபாரமான அலாதியான திறமைக்குச் சான்று, என்ற தவறான எண்ணம்; அத்தகைய கற்பனைகள், உலகிலே எங்கும் எந்த நாட்டவரும் செய்தறியாதன என்ற தவறான பிரசாரம். இதன் காரணமாக, அந்தப் பழைய கதைகளிலே விடாப்பிடியான பற்று, ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களே!