ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி
135
நமது நாட்டிலே மட்டுமல்ல, நானிலத்திலே பல்வேறு இடங்களிலேயும் பழங்காலத்திலே, இப்படிப் பலப் பல கதைகள் உலவின. அவர்களெல்லாம், அந்தக் கதைகள், பயனற்றன என்று கண்டறிந்து, புத்தறிவு பெற்றனர், என்பதை எடுத்துக் கூறவே ட்யூடன் புராணீகன், பிரபஞ்சம் எப்படி உற்பத்தியாயிற்று என்று கதை புனைந்தான் என்பதைக் காட்டினோம். ட்யூடன் கதையை மறந்து, அவர்கள் நியூடன் காலத்தில் புகுந்து, இன்று, அதற்கு அப்பாலும் சென்றுள்ளனர். யெமருக்குப் பால் கொடுத்த பசுவின் கதை கேட்டு மகிழ்ந்த காலத்தை மறந்து, காளையின்றிப் பசு, கன்று போடும் காலம்வரை வந்துள்ளனர்! மண்டை ஓடே, வான மண்டலம் என்ற கதைக் காலத்தைத் தாண்டி, வான மண்டலத்திலே காணப்படும் சந்திர மண்டலம் சென்றுவரக் கற்றுக்கொள்ளும் காலத்துக்கு வந்துள்ளனர். பேரசுரனின் இரத்தமே கடல் என்ற கதைக் காலத்தைக் கடந்து, பல தினங்கள், நீர்மூழ்கிக் கப்பலில் தங்கி, கடலுக்கடியே இருக்கமுடியும் என்ற ஆராய்ச்சிக் காலத்தில் புகுந்திருக்கிறார்கள். நாம்? இன்னமும் நரி பரியான பதிகத்துக்கு நாற்பத்து எட்டாவது விருத்தி உரை எழுதுபவருக்கு, நாமகள் தாசனார் விடுக்கும் மறுப்புரையைப் பிரசுரிக்கும் நற்காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டும், நமக்கு மட்டும் ஏனய்யா, இந்த நம்பொணாக் கதைகள்! நானிலத்தில் வேறு எங்கும் இவை தமை நம்புவார் இல்லையே என்று கேட்போரை நாத்தீகர் என்று தூற்றும் ‘சத்காரியத்தில்’ ஈடுபட்டுக்கொண்டும், இருக்கிறோம். சரியா? முறையா? தகுமா? கூறவேண்டாம்! எண்ணிப் பாருங்கள்!
❖