இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- எந்தச் சாமிகளின் சார்பிலே, அந்த மக்கள், அறிஞர்களை அழிக்கத் துணிந்தனரோ, அந்தச் சாமிகள் இன்று இல்லை! அத்தனை கடவுள்களும்-பண்டைய நாட்களிலே பாபிலோன், கிரீஸ், ரோம், எகிப்து, சீனா போன்ற பல நாடுகளிலே, கோடிக்கணக்கான மக்களால் கும்பிடப்பட்டு வந்த கோலாகலமான கடவுள்களும் கும்பிடப்படுவதில்லை. கோயில் இல்லை, கொட்டு முழக்கில்லை, எந்தெந்தத் தெய்வங்கள் எந்தெந்த நாட்டிலே இருந்தனவோ அந்த நாடுகளிலே இன்று சென்று கேட்டால், அந்தக் கடவுளரைக் காட்ட முடியாது! சாக்ரட்டீசைச் சாகடித்த கிரேக்க நாட்டிலே இன்று சாக்ரட்டீசுக்காகப் பரிந்து பேசவும், வாழ்த்தவும் மக்கள் உள்ளனர். ஆனால் எந்தத் தெய்வங்களை சாக்ரட்டீஸ் நிந்தித்தார் என்று குற்றம் சாட்டி விஷம் கொடுத்து அவரைக் கொன்றனரோ அந்தக் கடவுள்கள் இன்று அங்கே இல்லை!
மாஜி கடவுள்கள்
கடவுளின் கொலுமண்டபத்திலே காமப்பித்தம் கரைபுரண்டு ஓடுவதா? மகாஜனங்களே! உங்கள் முழு முதற் கடவுள் ஜூவஸ், என்ன கதியானான் தெரியுமா? அவனுடைய பத்னி, தர்மபத்னி, ஹீராவின் கதி என்ன தெரியுமா? பக்திசெய்து முக்தி பெற்றவன் செய்த பாதகச் செயல் என்ன தெரியுமா? காமக்குரோதாதிகளை அடக்கி ஆள்பவனே ஆண்டவனின் அருள் பெறுவான் என்றுதானே பேசுகிறீர்கள்? பூஜை செய்வது அதன்