இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- தங்கச் சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்கும் இந்தத் தனிப் பெருங்கடவுள், நீல நிறத் தலைப்பாகையும் மேகவர்ணப் பட்டாடையும் அணிந்துகொண்டு கம்பீரமாகக் காணப்படுவான். நல்ல உயரம், அதற்கேற்ற காத்திரம்! கண் மட்டுந்தான் ஒன்று!!......அவன் தோளின்மீது இருபுறத்திலும் இரண்டு அண்டங்காக்கைகள் உட்கார்ந்துகொண்டிருக்கும்! காலடியிலே இரண்டு ஓநாய்கள் படுத்துக்கிடக்கும்!
ஓடின்
ஒற்றைக்கண் தேவன் ஓடின், ஓர் மூலதெய்வம். பன்னெடுங்காலம் பக்திமான்களின் பூஜையைப் பெற்றுக் கொண்டு பரந்தாமனாக விளங்கி வந்தவன்; பராக்கிரமம் மிகுந்த ஓடின், பல தீரச்செயல்கள் புரிந்து, இகம், பரம் இரண்டிலும் ஏக சக்கராதிபத்யம் செலுத்தி வந்தான். ஓடின் புகழ், பாசுரமாக்கப்பட்டு, செயல்கள் திருவிளையாடற் புராணமாக்கப்பட்டு, பாமரரும் புலவரும், அரசனும் ஆண்டியும், ஒரு சேரக் கொண்டாடக்கூடிய விதமான தேவனாகப் பலகாலம் விளங்கியவன், இந்த ஓடின்.
ஜெர்மனி, அதை அடுத்துள்ள நாடுகள், பிரிட்டன், ஆகிய பல நாடுகளிலே, ஓடின், தேவதேவனாகப் பூஜிக்கப்பட்டு வந்தான். சிவனாருக்குக் கைலாயமும் விஷ்ணுவுக்கு வைகுந்தமும், குறிப்பிடப்படுவதுபோல, இந்தத் தேவ-