உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

137


னுக்கு, பழங்கால, டியூடானிக் மக்கள் ஆஸ்கார்ட் எனும், இடத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.

வைகுந்தமாவது கைலாயமாவது, அதெல்லாம், மனப்பிராந்தி, மதவாதிகளிலே மட்டரகமானவர்களின் கற்பனை, பித்துப்பிள்ளை விளையாட்டு என்று இன்று ஒரு சிலரால் கூற முடிந்தபோதிலும்கூட, பாமரர்களில் பெரும்பாலோர், கைலாயம் என்பது உண்மையாகவே இருப்பதாகவும், அங்கு ஒரு புறத்தில் சிவ—சக்தி நடனம் நடந்து கொண்டிருப்பதுபோலவும், மற்றோர் புறத்திலே முருகனின் மயில், தன் கலாபத்தை விரித்தாடுவதை, தினைப் புனத்தழகி திருமதி வள்ளி அம்மையார் கண்டு களிப்படைவது போலவும், ஆறுமுகங்களிலே, ஒரு முகத்தால் ஐயன் சிங்காரவேலன், இக்காட்சியைக் கண்டு ஆனந்திப்பதுபோலவும், தம்பிக்கு இந்தச் சுவைதான் தெரியுமே தவிர, ‘அப்பம் அவல்பொரி’ இவைகளின் ருசி என்ன தெரிகிறது என்று எண்ணியபடி, ‘மூஷிகவாகனன்’ ஓர் புறம் இருப்பதுபோலவும், நம்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள். மறுத்துப் பாருங்கள், பாமரரின் கோபம் எப்படிக் கிளம்புகிறது என்பது தெரியும்! இப்பொய்யுரைகளையே கொண்ட புராணங்களை, கிருபானந்தர்கள் கீதக் குரலிலே எடுத்துரைக்கும்போது, மன்னார்சாமிகள், மகிழ்வதைப் பாருங்கள்! மதி குழம்பியிருந்தபோது, தெளிவற்றவர்கள், கட்டிவிட்ட இத்தகைய பொய், இயல், இசை, நாடகமாகி, இன்றளவு வரையிலே, மக்கள் மன்றத்திலே, உலவ முடிகிறது.

சிலர் அறிவர், இவையெல்லாம் எத்தரின் கருவிகள் என்று. எனினும் எடுத்து இயம்பமாட்டார்கள், ஏமாளிகளின் கோபம் தம்மைத் தாக்குமே என்ற அச்சத்தால்.