உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மாஜி கடவுள்கள்


மனித அறிவு இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கட்டி, இறைவனை அறிவதற்கு முயன்றதே, என்ன விந்தை இது, என்று அவர்கள் எள்ளி நகையாடும் நாட்களில், ஓடின், மாஜி கடவுளான பிறகு, இங்கு, ‘பஸ்மாசூர் மோகினி’ கதை, காலட்சேபமாய், நாடகமாய், சினிமாவாய் நாட்டிலே உலவுகிறதே! இந்தக் கோணலைத் தடுக்க, யார் முன்வருகிறார்கள்! அமிர்தம்—ஆலகால விஷம்—மோகினி அவதாரம்—நீலகண்டன்—என்ற சொற்களும், அவைகளைச் சுற்றிக்கொண்டுள்ள கதைகளும், பாமரருக்கு மனப்பாடமாக இன்றும் இருக்கிறதே! படித்தோரும் இவை வெறும் கற்பனை என்று கூறப் பயப்படுகிறார்களே!! இதற்கென்ன செய்வது!

இந்நாளிலும் இங்குள்ள இந்நிலை, டியூடன் நாடுகளிலே பன்னெடுங் காலத்துக்கு முன்பு இருந்து வந்தது. அந்தப் பழைய காடி, பருக உதவாது என்று சாக்கடையில் கொட்டிவிட்டு, அறிவு எனும் அருவிநீரை அள்ளிக் குடித்து அந்நாட்டு மக்கள், தெளிவு பெற்றனர்! நாமோ இன்றும், பஞ்சகவ்யம் சாப்பிடும், பண்பிலேயே இருக்கிறோம்!

நாகரிகமும் நல்லறிவும் இல்லாத நாட்களிலே, டியூடன் மக்களின் மனதிலே மருட்சியையும் பக்தியையும் மூட்டி வந்த ஓடின், பல தேவிமார்களை மணம் புரிந்து கொண்டு பல குமாரர்களைப் பெற்றெடுத்ததாகப் புராணம் இருந்தது.

ஓடினின் முதல் மனைவி, ஜோர்ட் என்பவர்—ஏறத்தாழ நமது நாட்டுப் புராணிகர்கள், சித்தரித்துக் காட்டிய பூமாதேவி! டியூடன் பூமாதேவியின் புத்திரன்தான் தார் தேவன்—முருகன்போல, தந்தையைவிட இந்தத் தனயன் பராக்கிரமசாலி!