உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

143


அழகன் பால்டர் என்பவன் மற்றோர் மகன்! இவனைப் பெற்றெடுத்த தேவியின் பெயர், பிரிக் பெருமாட்டி!! ஒன்பது தேவகுமாரிகளை மணம் புரிந்திருந்தார் ஓடின். ஹெய் மிடால் என்று மற்றோர் மகனும் உண்டு, இந்த மகேசனுக்கு. லாக் என்றோர் தம்பி, இருந்தான். மற்றும் பல தம்பிமார்கள்! பெரிய குடும்பம்!!

கடவுளுக்கு இப்படிக் குடும்பம், குழந்தை குட்டிகள், என்றெல்லாம் கூறுவது கேலிக்கூத்து—மதமாகாது என்று, ஏதாவதோர் கல்லூரியில் பேசலாம்—மக்களிடம் சென்று பேசமுடியுமா? பார்வதி, கங்கா—தேவிமார்! முருகன், விநாயகன், பிள்ளைமார்! மைத்துனன், மகா விஷ்ணு! நந்தி, நாரதர் இசை தர! ரிஷபம், வாகனமாக இருக்க!—இப்படி இருக்கும் ‘சிவனாரின் குடும்பம்’ பெரிய குடும்பமாயிற்றே! கேலி செய்தால், சைவர் எவ்வளவு சீறுகின்றனர். இன்றும்!! அந்தச் சீற்றம் இருந்தது, அறிவுத் தெளிவு இல்லாத காலத்தில் டியூடன் மக்களுக்கு! அவர்கள், ஓடின் தேவனால்தான், உலகு, அலைகடலால் அழிந்து போகாமலிருக்கிறது, என்று நம்பித் தொழுது வந்தனர். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். கோயில் கட்டினர்—கோலாகலத் திருவிழா நடத்தினர்! பரமசிவனைப் பதிகம் பாடியும், முருகனைப் பிள்ளைத் தமிழ் பாடியும், விநாயகருக்கு அகவல் பாடியும், அருள்பெற நம்மவர்கள் விரும்புவது போலவே டியூடன் மக்களும், கடவுளின் குடும்பத்தினரில், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையாகப் பூசித்துப் பலன் வேண்டினர். அவர்கள் அன்று செய்து வந்ததை, எல்லாம் அறிவீனம் என்று கண்டறிந்து விட்டொழித்தனர். நமது பாமரரோ, அந்தப் பழயதையே உண்டு வருகின்றனர்—படித்தவர்களோ, அந்தப் ‘பழயதுக்கு’ ஊறுகாய் தேடித் தருகின்றனர்.