உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

மாஜி கடவுள்கள்


பொருட்டு என்றுதானே கூறுகிறீர்கள்? பக்தியில் மூழ்கிக் கிடப்பவர்களே! பாவ புண்யம் பேசுபவர்களே! பக்தன், மோட்சலோகம் சென்று, தேவலோகம் சென்று, கடவுள் சன்னிதானத்திலே என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? தூய்மைக்கு இருப்பிடந்தானே தெய்வ சன்னதி. மும்மலம் நீக்குபவன்தானே முழுமுதற் கடவுள். காயத்தின் அனித்யத்தை உணரும் கடவுள் சன்னிதானத்திலே நடந்த அக்ரமத்தைக் கூறுகிறேன், பதறாமல் கேளுங்கள்.

“மகாஜனங்களே! லப்பீதே என்ற தேசத்து மன்னன், மோட்சலோகம் சென்றான். தேவர் உலகம் போவது என்றால் அவன், புண்யசாலி என்றுதானே அர்த்தம்? காமக்குரோதமற்றவன், பழிபாவம் செய்யாதவன் என்ற காரணத்தால்தானே, இக்சியான்—அந்த மன்னன் பெயர் அது—ஆண்டவனின் அருள்பெற்றான். எல்லோருக்கும் கிடைக்கமுடியாத அப்பேறு பெற்றவன், இறைவனாம் ஜூவசின் இல்லம் சென்றான். அவன் என்ன செய்தான்? என்ன செய்திருக்க வேண்டும்? இறைவா! இணையில்லாதவனே! என்மீது கிருபை பாலித்தவனே! என்று தொழுதிருக்கவேண்டும், உருக்கத்துடன். இக்சியான், இறைவனை மறந்தான், இறைவனின் துணைவியார், ஹீரா தேவியார்மீது தன் காமக் கண்களை வீசினான். லோக மாதா என்று பஜிக்கிறீர்களே! அந்த ஹீரா அம்மையார்மீது மோகம் கொண்டான். அம்மையை நெருங்கியும் விட்டான், நெஞ்சிலே மிஞ்சிய காமத்தால் தூண்டப்பட்டு.

பிறகு ஜுவஸ் அவனைத் தண்டித்தார். கேட்டீர்களோ, மகாஜனங்களே! இறைவனுடைய இல்லத்திலே, அவருடைய துணைவியை, லோக மாதாவை, மக்களின் வணக்கத்துக்கு உரிய ஹீரா தேவியாரைத் தன் இன்பவல்லியாக்கிக் கொள்ளத் துணிந்தான், பக்தியால் முக்தி