உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓடின்

147


பிடித்து, ஒரு காட்டில் மரத்தில் கட்டிவிட்டான். காவலாளிகளை அமர்த்தினான், அவன் தப்பிப் போகாதிருக்க.

ஹாடிங், ஒரு மந்திரப் பாட்டுப் பாடினான்—உடனே, அந்தக் காவலாளிகள், மாயத் தூக்கத்திலாழ்ந்தனர். ஒரு பெரிய ஓநாய் கோரப் பசியுடன் வந்தது அவனைக் கொல்ல, மற்றோர் மந்திரப் பாட்டுப் பாடினான், ஓநாய் செத்தது! இன்னொரு பாட்டு; அவன் மீது பூட்டப்பட்ட தளைகள் யாவும் பொடிப் பொடியாயின. இவ்வளவு வல்லமையுள்ள மந்திரப் பாடல்களையும், ஓடின்தான் ஹாடிங்குக்குக் கற்றுக்கொடுத்திருந்தான்!

வேடிக்கை பாருங்கள், இவ்வளவு மந்திர பலமும், ஓடினுக்குப் பயன்படவில்லை, தோற்றோடிவிட்டான். அவனே பிறகு, மந்திர பலத்தை இன்னொருவனுக்கு அளிக்கிறான்!

ஹாடிங்கின் கஷ்டம் இவ்வளவோடு நிற்கவில்லை. ஓநாய் ஒழிந்தது. ஆனால் ஓர் ஒய்யாரி வந்தாள் அவன் முன்—காதல் செய்யலானாள்.

“பாவாய்! பழிதீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்னை நாடாதே—” என்கிறான் வீரன்.

“பாராய் என் அழகை! கூறாய ஓர் காதல் மொழி” என்று கெஞ்சுகிறாள் அவள்.

அவள் ஓர் அரக்க குல அணங்கு. பெயர், ஹார்ட் கிரெப். அரக்கி எனினும், விரும்பியபடி எல்லாம், வடிவமெடுக்கக்கூடியவள். விஸ்வரூபம் எடுக்கிறாள் ஓர் சமயம், விண்ணும் மண்ணும் நிரம்பிட நிற்கிறாள்.—மறுவிநாடி அந்த மாயாவதி, அதிரூப சுந்தரியாகி, அன்பைப் பொழிகிறாள்.