154
மாஜி கடவுள்கள்
வோர் விதமாகப் புகழ் பாடவுமாக இருந்தனர். பல கடவுள்களைப் பற்றிய எண்ணம் இருந்ததால், ஒன்றுக்கொன்று தொடர்பு என்ன என்பது பற்றியும் யாராரின் ஆற்றல் எதெதிலே சிறந்திருந்தது என்பதற்கும் பல கற்பனைகளைக் கட்டவேண்டி நேரிட்டது. இதனால், புராணப் புளுகுகள் மலை என வளர்ந்தன—அவ்வளவையும் நம்புவதுதான் ஆத்திகர் கடமை என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வந்தது, அந்நாளில், ட்யூடன் மக்களுக்கு.
கடவுள் என்றால், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைக் கடந்தவர், எட்டி எட்டிப் பார்ப்பவருக்கும் எட்டாப் பொருளாக இருப்பவர், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்ற தத்துவார்த்தப் பேச்சுகள் கிளம்பு முன்னம், கடவுள் ஒன்றல்ல, பல! ஓருரு அல்ல, பல்வேறு உருவங்கள்! பல கடவுள்களுமாகக் கூடி உலகைப் பரிபாலித்தனர் என்றல்ல, தங்களுக்குள் பகைத்துக்கொண்டும், போரிட்டுக்கொண்டும் வாழ்ந்து வந்தனர் என்றெல்லாம் கதைகள் இருந்துவந்தன. அவ்வளவும் அறிவுக்கு ஒவ்வாதவையே, எனினும் நம்பினவன் நற்கதி பெறுவான், நம்பாதவன் தலையில் இடிவிழும், நாசமாவான் என்றுதான், மதகுருமார்கள், மிரட்டி வைத்தனர் எந்தச் சமயத்தில் எந்தக் கடவுளுக்குக் கோபம் வருமோ, என்ற அச்சம் பிடித்தாட்டியபடி இருந்தது பேதை மக்களை. எல்லாக் கடவுள்களையும், மகிழ்வித்தால்தான், தங்களுக்குக் கேடேதும் ஏற்படாது என்ற எண்ணம் உண்டாகவே, மக்கள் தங்கள் நேரத்தில் மிகப் பெரும் பகுதியை, கடவுட் கூட்டத்தினை மகிழ்விக்கும் காரியத்துக்கே செலவிட்டு வந்தனர். ஒவ்வோர் கடவுளுக்கும் ஒவ்வோர் சமயம், திருவிழாவாக பூஜைக்குரிய சமயமாகக் குறிக்கப்பட்டு, அந்தமுறை தவறாமல், மக்கள், ‘பக்தி’ செலுத்தி வந்தனர்.