தார் தேவன்
155
ஓடின்தான் ஒப்பற்ற முழுமுதற் கடவுளாயிற்றே—அண்டபிண்ட சராசரத்துக்கும் ஆதிகாரணமான ஐயனாயிற்றே, அவன் அருள் கிடைத்தால் போதுமே, அவன் ஆணைப்படிதானே, அணுவும் அசையும், ஆழ்கடலும் அடங்கி நிற்கும், அவனைப் பஜித்தால் போதுமே, என்று ட்யூடன் மக்கள் எண்ணவில்லை; ஓடின் ஒப்பற்ற கடவுள்தான்—அவர் அருள் தேவைதான்—அவருக்கான பூஜைகள் புரியவேண்டியதுதான்—ஆனால்......!! என்று கூறிப் பெருமூச்செறிந்தனர். அவர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும், புராணிகர்கள், வேறோர் கடவுளையும் சிருஷ்டித்துக் காட்டினர்.
தேவகுமாரன் தார் வந்து நின்றான்—பூஜையைப் பெற—பக்தர்களின் காணிக்கையைப் பெற—மூடநம்பிக்கையின் விளைவைக் காண!
தார் தேவன், ஓடின் தேவனின் குமாரன்; பல திருக்குமாரர்கள் ஓடினுக்கு, எனினும் தார் தேவனே, முதல்வன், முக்கியமானவன், தந்தையை மிஞ்சக்கூடிய வல்லமை பெற்றவன், தரணியோரின் பக்தியையும் பாசத்தையும் அதிக அளவில் பெற்று, ஆதிக்கம் செலுத்தினவன்.
ட்யூடன் புராணிகர் சிருஷ்டித்த இந்தத் தார் தேவன் இடியாதிபதி—சம்மட்டிக் சூரன்—சர்வ வல்லமையுள்ளவன்!
ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றல் கொண்டவன், என்பதை எடுத்துக்காட்டும், உடலமைப்பு! எதிர்ப்போரை நொருக்கிவிடத்தக்க வலிமை வாய்ந்த கருவியான, சம்மட்டி, கரத்தில்! இந்தச் சம்மட்டியின் பெயர், முஜோல்னர் என்பதாகும்.