158
மாஜி கடவுள்கள்
கடவுட் தன்மைக்கே இழுக்கை அல்லவா இந்தக் கதைகள் உண்டாக்குகின்றன என்று மக்கள் எண்ணக்கூடுமே என்பதுபற்றிப் புராணிகர்கள் கவலைப்படவே இல்லை! அவர்களுக்கு இருந்த துணிவெல்லாம், கடவுட் சம்பந்தமான கதைகளை, யாராவது ஆராயத் தொடங்கினால், சந்தேகித்தால், கேலி பேசினால், கண்டித்தால், பாமர மக்களைக் கிளப்பிவிட்டு, நாத்திகன் எனப் பழிசுமத்தி அழித்துவிடலாம் என்பதுதான். அவ்விதம் அழிக்கவும் முடிந்தது அவர்களால்! பல பேர்களை!! சித்ரவதைக்கும் கொலைக்கும் தப்பிப் பிழைத்த ஒரு சிலரால்தான், நெடுங்காலத்துக்குப் பிறகு, உலகு, உண்மை ஒளியைக் காண முடிந்தது.
தார்தேவனுக்கு அந்நாட்களிலே இருந்துவந்த செல்வாக்கு, ராஜயாதிகாரிகளையே நடுநடுங்கச் செய்யக் கூடியது; ஆற்றலை விளக்கிவிட அவ்வளவு ‘அற்புதக் கதைகளை’க் கட்டி வைத்தனர். பாமரர் படித்தும், படிப்போர் பக்கநின்று கேட்டும் பக்திமான்களாயினர். அவர்களின் மனக்கண்முன், விண்ணும், அதிலே கொலுவீற்றிருக்கும் தாரும், அவன் ரதத்தில் பூட்டப்பட்ட ஆடுகளும், கரத்தில் இருந்த சம்மட்டியாயுதமும், தெரிந்த வண்ணம் இருந்தன. தார்தேவனை, அவர்கள், ஓடினை விடப் பலசாலி, என்று எண்ணினர், அருளை நாடினர்—பூஜைகள் பலப்பல செய்து.
“ஓ! பக்திமான்களே! ஓடின் தேவன் பெற்றெடுத்த ஒப்பிலா மணியாம், தார்தேவனின், வீரதீரச் செயலைக் கூறுவேன் கேளீர்!” என்று புராணிகன் கூறுவான், ட்யூடன் மக்கள், அந்தப் புராணிகன், தார்தேவன்கூடவே பழகி, இவ்வளவையும் நேரில் கண்டறிந்து கூறுகிறான் என்று எண்ணுபவர்போல, வாய் பிளந்தபடி, அவன் கூறும் அபத்தக் கதைகளைக் கேட்பர்.