தார் தேவன்
161
புரட்சிகள், எவ்வளவு பயங்கரமான ஆபத்துக்களை உண்டாக்கியிருக்கும், அறிவு பரப்பும் படையினருக்கு என்பதை எண்ணிப்பார்க்கும்போதுதான், பகுத்தறிவுவாதிகளின் ஆற்றலும் தன்னலமதிப்பும், தெளிவாகத் தெரியும்.
ஒரு மன்னனை, கொடுங்கோலனை வீழ்த்துவது புரட்சி என்று பூரிப்புடன் பெருமையுடன் கூறப்படுகிறது—உண்மையுந்தான் அது—கடவுள்களை மாஜிகளாக்கிய சம்பவங்கள், இவைகளைவிட எவ்வளவு பெரும் புரட்சிகள் என்று எண்ணிப் பார்க்கும்போதுதான், பகுத்தறிவுப் படையினரின், மாண்பு விளங்கும். மக்களாட்சியை அமைக்க, மாவீரர் நடத்திய புரட்சிகளைவிட, பலவகையிலும், வீரமிக்கவை, அறிவாட்சி அமைக்கப் பகுத்தறிவுவாதிகள் மேற்கொண்ட புரட்சிகள். அந்தப் புரட்சிகளின் பலனாகத்தான், தார்தேவன், மாஜி கடவுளானான்!
தார், கடவுளாக இருந்தபோது, எத்தனை விதமான கதைகள்! நம்நாட்டுப் புராணிகன், தோற்றான், என்றுகூடக் கூறலாம், அவ்வளவு அற்புதக் கதைகள்!
கடவுட் கூட்டத்துக்கு எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டு வந்த, ஜோட்டூன் கூட்டம் ஒன்று இருந்ததாம்—தேவர்களுக்குத் தொல்லை தர அசுரக் கூட்டம் இருந்ததாக, நம் நாட்டுப் புராணிகர்கள் கூறுகிறார்களல்லவா, அதுபோல இந்த ஜோட்டூன்களுடன், அடிக்கடி போர் மூண்டுவிடும்! தார் தேவனின் சம்மட்டி ஆயுதத்தின் மகிமையினால்தான், இந்த ஜோட்டூன்கள் அழிக்கப்பட்டனர். தார் தேவனின் பெருமைக்கு முக்கியமான காரணம், இதுவேயாகும். கடவுள்களையே கலங்கச்செய்து கொண்டிருந்த ஜோட்டுன்களை அடக்கிய கடவுள், தார் தேவன்.
11