162
மாஜி கடவுள்கள்
நம் நாட்டுக் கந்தபுராணம் இல்லையா, முருகனின் வேலாயுதத்தின் மகிமையை விளக்க. அதுபோல, தார் தேவனின் சம்மட்டி ஆயுதத்தின் மகிமையை விளக்க, ஜோட்டூன் சம்ஹாரப் புராணம் கிளம்பிற்று.
சமுத்திரதேவன், ஒருமுறை, ஓடின் மாளிகைக்குச் சென்றான், விருந்துண்ண. ஓடினும் தாரும், குடும்பம் பூராவும், சமுத்திர தேவனுக்கு உபசாரம் செய்து மகிழ்வித்தனர்.
சமுத்திர தேவனிடம் இவ்வளவு கனிவு காட்டியதற்குக் காரணம், அந்தத் தேவன், பெரும் பணக்காரன் என்பதுதான். ஆழ்கடலுக்கு அடியில் அவனுக்கோர் அணி மாளிகையாம், அங்கு தங்கத்தை நெருப்பிலிட்டுச் சமையல் செய்வார்களாம்! ஈஜீர் என்ற திருநாமமுடைய இந்தச் சமுத்திரதேவனுக்கு, ரான் என்ற தேவியும், ஒன்பது குமாரிகளும் உண்டு! கடலிலே செல்வோர், தங்கக் குவியலைக் காணிக்கையாகச் செலுத்தினால்தான், தப்பமுடியும்! இதனால், சமுத்திர தேவனிடம் ஏராளமான தங்கம் குவிந்து கிடந்ததாம். கடவுளர் உலகிலேகூட, பணக்காரருக்கு ஒரு தனிமரியாதை!! எனவே, சமுத்திரதேவனுக்கு ஓடின் விமரிசையான விருந்தளித்தான். தேவரசம் தரப்பட்டது! தேவகானம் அளிக்கப்பட்டது, தேவர் தேவனாம் ஓடினால், கடலுலகக் கடவுளுக்கு மைசூர் மகாராஜாவுக்குத் திருவிதாங்கூர் மகரராஜா விருந்தளித்தால், கேரள நாட்டுக் கீதமொழிக் கன்னியரின் கானமும் நடனமும் நடக்குமல்லவா, அதுபோல! பிறகு, திருவிதாங்கூர் மன்னரை, மைசூரார், தமது ராஜ்யத்துக்கு வருமாறு அழைப்பாரல்லவா! அதுபோலவே, சமுத்திரதேவன், தன் ராஜ்யத்துக்கு ஒருமுறை வந்து போகும்படி, ஓடினைக் கேட்டுக் கொண்டார்.