உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார் தேவன்

163


ஓடின், குடும்ப சகிதம் சமுத்திர லோகம் சென்றார், விருந்தாளியாக! கேட்கவேண்டுமா, கேளிக்கையை! தங்கத்தை விறகாக்கும் தேவனாயிற்றே, ஈஜிர்! விருந்தும் வைபவமும் பிரமாதமாக இருந்தது. எனினும் ஒரு குறை தெரிந்தது! ஓடின் தந்ததுபோல, இனிமையான ரசபானம் தரவேண்டும் என்று ஈஜிர் விரும்பினான்—ஆனால், வந்திருக்கும் கடவுளருக்கெல்லாம், போதுமான அளவு, ‘ரசபானம்’ காய்ச்சுவதற்கேற்ற, பெரிய கொப்பரை இல்லையாம்!

என்னய்யா பைத்யக்காரத்தனம்! தேவன் என்கிறீர், மகிமை மிகுந்தவன் என்கிறீர்! ஆழ்கடல் முழுவதும் அவன் ஆணைக்கு அடங்கும் என்று கூறுகிறீர்—அடுப்பு நெருப்பிலே, தங்கத்தைத் தூவுகிறான் என்று அளக்கிறீர். அப்படிப்பட்டவன் அரண்மனையில், பாயசம் காய்ச்சப் பாண்டம் இல்லை என்று கூறுகிறீரே! இதென்ன விந்தை!!—என்று கேட்கத் தோன்றும், கிருத்திகை அமாவாசைகளுக்குக்கூட. ஏனெனில், விஷயம், நம் நாட்டுக் கடவுளைப் பற்றியதல்ல, எனவே தைரியமாகக் கேட்கத் தோன்றும்—கடவுளுக்குப் பாண்டம் கிடைக்கவில்லையா! என்று கேலி பேசத் தோன்றும். ஆனால், ட்யூடன் மக்கள் அந்தக் காலத்தில், இவ்விதம் கேட்கவில்லை—கேட்பது பாபம் என்று எண்ணினர்—அவ்வளவு பைத்தியக்காரர்களாகவா இருந்தனர் அந்த மக்கள்? என்று கேட்கத் தோன்றும்—ஆமாம்! அவ்வளவு அறிவீனாகளாகத்தான் இருந்தனர்—அந்த அறிவீனத்தையே ஆத்திகம் என்று கொண்டாடினர். அவர்கள் அந்நாளில் இருந்த நிலையில் இன்று இல்லை—அவர்கள் அந்நாளில் இருந்த நிலையை கேட்டுக், கேலிபேசும் கண்ணியர்கள், இந்நாளிலும் நம் நாட்டிலே, பாமரரில் பெரும்பாலோர், இதுபோன்ற அறிவுக்கொவ்வாத கதைகளைப் புண்ய ஏடுகளாகப் போற்றுகிறார்களே, இதற்கென்ன செய்கிறார்கள்?