164
மாஜி கடவுள்கள்
ஆடு ஏறும் ஆண்டவன்! சம்மட்டி ஏந்தும் சர்வேசன்! பாண்டம் தேடிய பகவான்! என்றெல்லாம், தார், ஓடின் போன்ற ட்யூடன் கடவுள்களைப் பற்றிய கதைகள் கூறப்படும்போது, கேலியும் கண்டனமும் தானாக, இயற்கையாகத் தோன்றி, இப்படியெல்லாமா, மூடநம்பிக்கை இருந்தது என்று கூறிடத் தோன்றுகிறதே—தவிர, தோடுடைய செவியன், விடை ஏறி, ஓர் தூவெண் மதிசூடி, காடுடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர்கள்வன்—என்று, இன்றும், பாசுரம் படிக்கும்போது இப்படியும் கடவுளைச் சித்தரிப்பதா என்று கேட்டால் சீற்றம்தானே பிறக்கிறது! சரியா? சிந்தித்துப் பாருங்கள்!!
பாயசம் காய்ச்சப் பாண்டமின்றிக் கவலைப்பட்ட சமுத்திர தேவனைப் பார்த்து, விருந்துக்கு வந்திருந்த தார் தேவன், நான் கொண்டு வருகிறேன், பெரியதோர் பாண்டம் என்று கூறினான்.
தார் தேவன் இவ்வண்ணம் கூறியதற்குக் காரணம், ஒன்பது உலகிலும் உள்ள பாண்டங்களை எல்லாம்விடப் பெரியதோர் பாண்டம், இருக்குமிடம் தனக்குத் தெரியுமென்று, டையர் என்ற ஒரு கடவுள் தந்த தகவல்தான். சரி, என்றான் சமுத்திரராஜன்—உடனே தார் தேவன், டையர் தேவனுடன், பாண்டம் கொண்டுவரக் கிளம்பினான்.
அண்டசராசரத்துக்கு அப்பாலுள்ள ஓர் இடத்தில் நாய்முகம் கொண்ட ஓர் அசுரன்—அவன், இந்த டையர் தேவனுக்கு, ஸ்வீகாரத் தகப்பனாம்! அவனிடமே அவ்வளவு பெரிய பாண்டம் இருந்ததாம். அதைக் கொண்டுவரக் கிளம்பினான் தார்.
தாரோ, தேவன்—தேடுவதோ பாண்டம்!!