உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார் தேவன்

165


டான் கிஸ்டர், டான் கிரிஸ்னர் எனும் இரண்டு ஆடுகளையும், ரதத்தில் பூட்டினான்; தார்—ரதம் வாயுவேகம் மனோவேகமாகச் சென்றது—வழியில், ஓர்வாண்டல் என்றோர் நண்பன் வீடு—அங்கு சென்று இளைப்பாறினர். பிறகு கால் நடையாகவே கிளம்பி. நாய்முக அசுரன் இருக்குமிடம் சென்றனர்—இந்த அசுரன் பெயர், ஹைமர்.

அசுரனுடைய அரண்மனையை அடைந்ததும் அங்கு, பல தலை கொண்ட பயங்கர ராட்சசக் கிழவி, இவர்களை வரவேற்றாள். ஏனெனில் அவள், டையர் தேவனின் பாட்டி! அவள், அசுரஜாதி எனினும் அவள் பேரன், கடவுள் ஜாதி!! கதை, வெறும் கேலிக் கூத்தாக இருக்கிறதே என்று சொல்வீர்கள்! கடவுள் கதை! திருவிளையாடற் புராணம்! சந்தேகித்தால் பாபம்!! என்று கூறுவர், மதவாதிகள்.

பாட்டி அசுர ஜாதி, அகோர ரூபம்—ஆனால் அவள் மகள், அதிரூப சுந்தரி! இவளுடைய உதவி டையருக்கும். டையர் தயவால் தார் தேவனுக்கும் கிடைத்தது.

மாலையில், வீடுவந்தான் நாய்முகாசூரன்—பெரிய பெரிய மீன்களுடன்! தார் தேவனையும் டையரையும் கண்டதும் கடுங்கோபம் கொண்டான். அவனுடைய கோபப்பார்வை பட்ட மாத்திரத்தில், அங்கிருந்த பல பொருள்கள் பொடிப் பொடியாகிவிட்டன. அவனைச் சாந்தப்படுத்தி, டையரும் அவன் நண்பனும் விருந்தாளிகளாக வந்திருப்பதை அதிரூப சுந்தரி வினயமாக எடுத்துக் கூறினாள்.

பிறகு, சாப்பிட உட்கார்ந்தனர். மூன்று காளைகளைச் சுட்டு, விருந்துக்குக் கறியாக வைத்தான் அசுரன். இரண்டு காளைகளை, தார் தேவன் வேகமாகத் தின்று தீர்த்துவிட்டான்—இந்தத் திருவிளையாடலைக் கண்டு அசு-