உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



168

மாஜி கடவுள்கள்


வீசினார்—மீன் ஒன்று சிக்கிற்று—அது மிக மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்று இருவரும் யூகித்தனர், ஏனெனில், அவர்களுடைய படகே, கிடுகிடுவென ஆடத் தொடங்கிற்று, தூண்டிலில் சிக்கிய மீன், தப்பித்துக் கொள்ள முயன்று, போரிட்ட காரணத்தால், தார் தேவன் தன் முழு வலிவையும் கொண்டு தூண்டிலைத் தூக்குகிறார்—முடியவில்லை. அகோரச் சத்தம கேட்கிறது—படகு கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது. நாய்முகாசூரனுக்கு நடுக்கம் பிறந்துவிட்டது. கடைசியில் தார் தேவன், தூண்டிலைத் தூக்கினார்—மீனல்ல—பெரும்பாம்பு—சாதாரணப் பாம்பல்ல, கடவுள்களை எல்லாம் கலங்கச்செய்து கொண்டு, கடலுக்கு அடித்தளத்திலே படுத்துக்கொண்டு, கடல் முழுவதும் பரந்துகிடக்கும் அளவுள்ள மிட்கார்டு எனும் பாம்பு!

அண்டத்தை எல்லாம் தாங்கும் ஆதிசேஷன் கதை இல்லையா, நம்நாட்டில்—அதுபோல, ஆழ்கடலைக் கலக்கும், மிட்கார்டு கதை ட்யூடானியருக்கு,

மிட்கார்டு, போராடுகிறது—தார் தேவன், அதை அழித்தே தீருவதென்று ஆற்றலுடன் போராடுகிறார். பலரையும் மிரட்டிப் பிழைத்து வந்த நாய்முகாசூரன் நடுக்கத்துடன் இதைக் கண்டு, என்ன விபரீதம் நேரிடுமோ என்று எண்ணி, தூண்டிலை அறுத்துவிட, பாம்பு, அண்டம் அதிர்ந்ததோ என்று கூறத்தக்கவிதமான சத்தத்துடன், கடலடி வீழ்ந்தது, கடுங்கோபம் பிறந்தது தார் தேவனுக்கு! சம்மட்டியால் ஓர் அடி கொடுத்தார்—அசுரன், ஆழ்கடலிலே வீழ்ந்தான். அங்கே, மிட்கார்டு, விஷத்தைக் கக்குகிறது! எனவே, மேலே கிளம்பினான் கிலியுடன்—படகிலே வந்தமர்ந்தான்—தார் தேவனும், போகட்டும் என்று விட்டுவிட்டார். இருவரும் வீடு திரும்பினர்.