இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- லாக் தேவன் ஓடினுக்குத் தம்பி—தார் தேவனுக்குச் சிற்றப்பன். சிண்டு முடிந்து விடுவதுதான் லாக் தேவனுக்குப் பொழுது போக்கு கடவுளர் உலகிலே, கலகமூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான், இந்த லாக். லாக்கின் அக்ரமச் செயல்களால், கடவுளர் உலகே அடிக்கடி அவதிக்கு ஆளாகுமாம்.
லாக் தேவன்
“வம்புக்காரன்! வல்லடி செய்பவன்! கலகக்காரன்! கெட்ட எண்ணக்காரன்! போக்கிரி! ஒருவரையும் வாழவிட மாட்டான்! ஒன்றல்ல இரண்டல்ல அவன் செய்த அக்ரமங்கள்!”
“யாரைக் குறித்து இவ்வளவு கண்டிக்கிறாய்?”
“அதோ போகிறானே அந்த அநியாயக்காரனைப் பற்றித்தான் சொல்கிறேன்.”
“யாரை! அதோ போகிற ஆசாமியையா? இப்போதுதானே அவனிடம் அன்பாகப் பேசினாய்—அடக்க ஒடுக்கமாக இருந்தாயே! அவர், இவர் என்று மரியாதையாகப் பேசினாயே!”
“ஆமாம்! வேறே என்ன செய்வது! அவன் அக்ரமக்காரன்தான், நமக்கு ஏன் அவனுடைய பொல்லாப்பு என்பதற்காகத்தான் அவன் எதிரே, மரியாதையும் அன்பும் காட்டினேன், பாவனைக்கு”