உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாக் தேவன்

173


கீர்த்தியும், தார் தேவனின் செல்வாக்கும் தனக்கு ஏன் வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களுடன் குலவிக்கொண்டே, இதற்கான திட்டமிடுவான்—தோற்பான்—தண்டிக்கப்படுவான்–மீண்டும் முணுமுணுத்துக்கொண்டே, அதே அக்ரமத்திலேயே ஈடுபடுவான். இப்படி ஒரு கடவுள்! இதற்குப் பக்தி, பூஜை, பாசுரம், தேர், திருவிழா.

கேடு செய்வதையே குணமாகக் கொண்ட இந்த லாக் தேவனைக் கொண்டு, கடவுளர் உலகின், பரம்பரைப் பகைவர்களான, ஜோட்டூன்கள், பழி தீர்த்துக் கொள்ளத் தீர்மானித்து, மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பினர், கடவுளர் உலகுக்கு. இந்த மூவரும் மாயா ஜாலத்தினால், ஒரே உருப்பெற்று, தேவர் உலகு வந்தடைந்து பணிப் பெண்ணாக அமர்ந்தனர்!

இந்த மாயாவதிமீது லாக்தேவனுக்கு மையல்! பிறகு கேட்கவேண்டுமா! அந்த மைவிழியாள், லாக்கின் மனதிலே ஏற்கனவே மூண்டுகிடந்த கெட்ட எண்ணங்களை, மலை உருவாக்கினாள்,—அலை என ஓயாது கிளம்பியபடி இருக்கச் செய்தாள்.

ஜோட்டூன் தலைவனுக்கு, தேவலோகத்திலிருந்த அழகான ஒரு பெண் கடவுள்மீது மோகம் பிறந்துவிட்டது—அந்தப் பெண் கடவுளை எப்படியாவது, மயக்குவது என்பது இந்த மாயாவதிக்கு, ஜோட்டூன்கள் விதித்த கட்டளை. பெண் கடவுளின் பெயர் பிரஜீயா! கடவுள் உலகிலேகூடப் பாபம், பெண்களுக்கு, இந்தப் பேராபத்து இருக்கத்தான் செய்கிறது!!

கடவுள்கள் தமது “லோக”த்துக்குப் பகைவர்களால் ஆபத்து நேரிடாதபடி இருக்க ஒரு பலமான மதிற்சுவர்