உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மாஜி கடவுள்கள்


கட்டவிரும்பினர்! கடவுளருக்கா இந்த யோசனை பிறந்தது, விசித்திரமாக இருக்கிறதே என்று கேட்கத்தான் தோன்றும், இப்போது. அப்போது, இவ்வித எண்ணம், தூய்மையான ஆத்திகமாகக் கருதப்பட்டது! இப்போதும் நம் நாட்டிலே, அனுமார் வால்கோட்டை கட்டியது—அணிலின் முதுகை இராமர் தடவிக்கொடுத்தது—ஆகியவைகளை நம்ப மறுப்பவனை நாத்திகன் என்று கூறிடும் நல்லறிவாளர்கள்(!) உள்ளனரே! ட்யூடன் மக்கள், அறிவுபெறாத காலத்திலே நம்பினர் இதுபோல.

ஜோட்டூன் ராட்சசன் ஒருவன், சித்திரக்குள்ளன் வடிவத்திலே வந்தான், அந்த மதிற்சுவர் கட்ட. அவனுடைய நிபந்தனைகளைக் கேட்டுக் கடவுளர்களுக்குக் கோபம் வந்தது—விரட்ட எண்ணினர். விஷமத்தனத்தை விருதாகக்கொண்ட லாக் தேவன்தான், தந்திரமாக, கடவுளர்களை, மாயக்குள்ளனின் ஏற்பாட்டுக்கு இசையச் செய்தான். அவன் கேட்ட நிபந்தனைகளோ, கடவுளரின் கண்களைக் கோபத்தால் சிவக்க வைத்துவிடக்கூடியவை. கட்டழகி பிரஜியாவை அவன் காணிக்கையாகக் கேட்டான். அதுவும் போதாதென்று, சூரியனையும் சந்திரனையும், தந்துவிட வேண்டுமென்றான்.

கடவுளரிடம், கலகக்கார லாக், இந்த மாயாவி, நாம் குறிப்பிடும் காலத்திற்குள் மதிற்சுவரைக் கட்டமாட்டான், எனவே அவனை நாம் தண்டிக்கலாம், பிரஜியாவை இழக்க வேண்டிய நிலைமையே உண்டாகாது என்று தந்திரமாகக்கூறி, ஏமாற்றினான்! ஒரு கடவுள் ஏமாற்றுகிறார்! மற்றக் கடவுள்கள் ஏமாறுகின்றனர்! எத்தன்! ஏமாளி! கடவுளரின் இலட்சணம் இவ்விதம்—இப்படிப் புராணங்கள்—இவைகளை நம்புவதுதான் மதம்!!