உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாக் தேவன்

177


ளிக் குதித்து, “நான் இறைச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் தின்பேன்—வேண்டுமானால் போட்டியிடச் சொல்” என்றானாம். லாக்குக்கும் மாயாபுரி ராட்சசன் ஒருவனுக்கும் ‘போட்டி’ நடந்தது, லாக் தோல்வியுற்றான். “இது போகட்டும்—ஓட்டப் பந்தயத்திலே எனக்கு நிகர் எவரும் இல்லை” என்று வீரம் பேசினான் லாக். தேவருலகில், லாக்குக்கு மிஞ்சியவர்கள் கிடையாது ஓட்டத்தில்—எனினும், மாயாபுரிக் குள்ளன் ஒருவன் தோற்கடித்துவிட்டான், லாக் தேவனை. தார் தேவன், சூரத்தனமாகக் கிளம்பினான்—“நான் எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பேன்” என்றான்—தோற்றான் ஒரு ராட்சசனிடம். ஒரு பூனையைக் காட்டி, “பாலகனே! இதைத் தரையிலிருந்து தூக்கு பார்க்கலாம்” என்றான் மாயாபுரி மன்னன் தூக்க முடியவில்லை தார் தேவனால். ஒரு கிழவி வீழ்த்திவிட்டாள் தார் தேவனை, குஸ்திப் போட்டியில். இப்படி லாக்கும் தாரும், தோல்விமேல் தோல்வி அடைந்து துயருற்றனர். கடவுள்கள் தோற்கின்றனர்! பொருத்தமாக இல்லையே, என்று கூறிடத் தோன்றும்; அறிவு ஏற்றுக்கொள்ளத்தான் மறுக்கும்—எனினும் ஆத்திகம் இவைகளை நம்பித்தான் தீரவேண்டும் என்று ஆர்ப்பரித்தது அந்நாட்களில்—நம்பினர் ட்யூடன் மக்கள்.

மாயாபுரி திடீரென்று மறைந்ததாம்—ராட்சசன் சிரித்துக்கொண்டே, நீங்கள் கண்டது கண்கட்டு வித்தை; கவலைப்படாதீர்கள்—இறைச்சி தின்னும் போட்டியிலே ஜெயித்தது, தீ! ஓட்டப் பந்தயத்திலே வெற்றி பெற்றது, சிந்தனை! குடிக்கும் போட்டியிலே ஈடுபட்டபோது, குடிக்கத் தரப்பட்டது கடல்! பூனை, பூனையல்ல, அண்டசராசரத்தையும் அஞ்சிடச் செய்யும் மிட்கார்டு எனும் அரவம்! குஸ்தியில் வெற்றி பெற்றது, வயோதிகம்!—என்று தத்துவார்த்த விளக்கம் கூறிவிட்டு மறைந்தான்.


12