180
மாஜி கடவுள்கள்
யும் என்று அலட்சியமாகக் கருதி, புல்லுருவியிடம் மட்டும் சத்தியம் வாங்கிக் கொள்ளவில்லை.
தன் மகனுக்கு இனி மரணபயம் இல்லை, என்று மகிழ்ந்தாள்—அழகனுக்கு ஆபத்து இல்லை என்பதறிந்து எல்லாக் கடவுளரும் களித்தனர். மலை, மலர், இரும்பு, பஞ்சு, நீர், நெருப்பு ஆகிய எதை எடுத்து பால்டர்மீது வீசினாலும் அழகுத் தெய்வம் புன்னகை செய்யும்—எதுவும் துன்புறுத்தாததால். இதைக் கண்ட லாக், பொறாமை கொண்டு, அங்கிருந்த ஒரு குருட்டுக் கடவுளைத் தூண்டிவிட்டு, அனைவரும் பால்டர்மீது எதையாவது வீசி விளையாடுகிறார்களே, நீ மட்டும் ஏன் சும்மா இருக்கிறாய் இந்தா வீசு என்றுகூறி ஒரு புல்லுருவியைக் கொடுத்தான். சூதுவாதறியாக் குருட்டுத் தெய்வம், புல்லுருவியை அவன்மீது வீச, அதுபட்ட மாத்திரத்தில், பால்டர், பிணமானான். கடவுளர் கதறினர். மகனை இழந்த மகேசன், புரண்டழுதான். அனைவருக்கும் லாக்மீது சந்தேகம். அவனைப் பகிஷ்கரித்தனர். லாக்கும் ஓடிப்போய் குகை ஒன்றில் ஒளிந்துகொண்டான். தார் தேவன் அவனைக் கைதுசெய்து, ஒரு பெரும் பாறையில் கட்டிப்போட்டுவிட்டான். ஓடின் ஆணைப்படி, லாக்கின் முகத்தின்மீது, கடும் விஷம் சொட்டுச் சொட்டாக விழ, ஏற்பாடாகி இருந்தது, விஷத்துளி பட்டதும் லாக் துடி துடிப்பான்; நெருப்பெனச் சுடும் விஷம் அது. இவ்வளவு கொடியவனான லாக்குக்கு ஒரு உத்தம பத்தினி இருந்தாள்—இந்தச் சாவித்திரி, சதா தன் பதியின் பக்கம் வீற்றிருந்து, விஷத்தை ஒரு கோப்பையில், பிடித்தபடி இருப்பாளாம்—கணவன்மீது விழாதபடி—கோப்பை நிரம்பியதும், விஷத்தைக் கீழே கொட்டிவிட்டு வரவேண்டுமல்லவா—அப்போது சில துளிகள் லாக்கின் முகத்திலே விழுமாம்—தாங்கமுடியாத வேதனையுடன் துடியாய்த்