உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெரோடாக்

189


பார்த்தசாரதி முதலியாரின் ‘பார்யாள்’ தந்த தர்மம்—அந்தப் பால்! இன்று! பாபிலோனியா தன் பழங்கதையை பித்துப்பிள்ளை விளையாட்டு என ஒதுக்கிப் பலநூறு ஆண்டுகளாகிவிட்டன—நமது நாட்டிலோ, புராணம் இன்றும், பாராயணம் செய்யப்பட்டு வருகிறது! பகுத்தறிவு பாபமாகக் கருதப்படுகிறது! பழைய புராணம், பஞ்சாமிர்தமாக இனிக்கிறது! கேள்வி கேட்டால், புருவத்தை நெறிப்பர்! விளக்கம் கேட்பவன், விதண்டாவாதி என்று தூற்றப்படுகிறான். நம்ப மறுப்பவனை, நையாண்டி செய்பவனை, நாத்தீகன் என்று, ஊரார்கூட அல்ல, அவன் வீட்டாரே, ஏசுவர்! இங்கு இன்றுள்ள நிலையில், பாபிலோன், பன்னெடுங்காலத்துக்கு முன்பு இருந்தபோது பிரபஞ்ச உற்பத்திக்காக, பூஜாரிக் கூட்டம் கட்டிய கதையை, அறிவு பிறந்ததும் எட்டி என்று எடுத்தெறிந்துவிட்டனர். அறிவு அரும்பா முன்னர் அந்நாட்டு மக்கள் நம்பிய கதை இது.

தன்னிடம் வந்து முறையிட்ட தேவர்களை நோக்கி, டியாமட் தேவி, “ஆமாம்! ஆழாழியின் அமைதியும் கெடுகிறது, ஈயா தேவனின் செயலால்! அவனை அழித்திடத்தான் வேண்டும். அதற்கு என்ன செய்வது, கூறுமின்!” என்று கேட்க, இந்த மந்திராலோசனை முழுவதையும், தந்திரமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஈயா தேவன் தன் பராக்கிரமத்தால், அப்சூ, மம்மூ இருவரையும் சிறைப்படுத்திவிட்டான்.

பற்களை நறநறவெனக் கடித்தபடி, டியாமட் தேவி, கிங்கு தேவனை அழைத்து, “போர்! போர்! இனி அந்த ஈயாக் கும்பலுடன் போர்!” என்று உத்திரவு பிறப்பிக்க, இரு தரப்பும் படை திரட்டலாயின, பாபிலோன் தேவாசுர யுத்தம்! ஈயா தேவனும் அவனைச் சார்ந்தவர்களும் தேவர்கள்! டியாமட் கூட்டம் அசுரர்!