உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெரோடாக்

191


மெரோடாக் பலசாலி மட்டுமல்ல, யூகமுள்ள தேவன். எனவே, “சரி! இந்த சம்ஹார காரியத்தை நான் செய்து முடித்தால், சன்மானம் என்ன தரப்படும்” என்று பேரம் பேசலானான். “என்ன வேண்டுமானால் கேள்!” என்றனர், மற்றக் கடவுள்கள். “அங்ஙனமாயின, இனி, நானே எல்லாக் கடவுள்களுக்கும் மேலானவன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்வதானால், நான் அசுரக் கூட்டத்தை அழித்தொழித்து, கடவுளரை ரட்சிப்பேன்” என்றான் மெரோடாக். மற்றக் கடவுள்கள் இசைந்தனர். கடவுளரின் மணிமண்டபத்திலே இந்த வைபவம் நடைபெற்றான பிறகு, விஷத்தைக் கக்கும் நாலு புரவிகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தான் தேவதேவன், கையிலே கதை! உடல் முழுவதும் தீப்பிழம்பு! மின்னல் அவன் முன்னோடுவோனாயிற்று. யாரையும் பிணைக்கும் மாயவலை ஒன்றை அனுதேவன் தந்தான். இவ்வளவு யுத்த சன்னத்துடன், மெரோடாக் கிளம்பினான். ‘ஜய விஜயீபவ!’ என்று வாழ்த்தினர் கடவுளர். ஏழு விதமான பெருங்காற்றை ஏவிய வண்ணம், மாவீரக் கடவுளாம் மெரோடாக் சென்றான்.

அவன் வருகை கண்டு டியாமட் தேவி, தன் வாயைத் திறந்தாள், ஆச்சரியத்தால்! வாய் என்றால், சாமான்யமானது அல்ல! அதன் அகலம் ஏழு மைல்!! இதுதான் சமயமென, ஏழு காற்றையும் டியாமட்டின் வாயில் புகச் செய்தான் பாபிலோன் முருகன்! என் செய்வாள் ராட்சசி! வாய் மூட முடியவில்லை! காற்று குடைகிறது! எடுத்தான் கதாயுதத்தை! கொடுத்தான் பலமான ஓர் அடி! கீழே வீழ்ந்தாள் பிணமாக!! சம்ஹாரமூர்த்தி, கிங்குவைச் சிறைப்படுத்தி, அவன் மார்பகத்தே இருந்த, விதிப்பலகையை எடுத்துக்கொண்டான். அனுதேவன் தந்த மாயவலையை வீசி, மற்ற அசுரர்களைப் பிடித்தான்—சிறையில் அடைத்தான்—டியாமட்டின் உடலை இரு கூறாக்-