மச்சாவதாரம்
195
மாலையோன் என்பதையும், அறிவாயா! அறிவிலி! இந்த அவதாரங்களிலே புதைந்து கிடக்கும் இரகசியத்தை உணரும் மனப்பக்குவம் உனக்கு உண்டோ!” என்று புராணீகர்கள் ஏசுவர். ஏதோ ஒரு காலத்திலே, இயற்கை நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கிடைக்காமல், மனிதகுலம் மருட்சியுடன் இருந்தபோது, வளமான மூளைகளிலிருந்து கிளம்பின எண்ணங்கள்தானே இந்த அவதாரக் கதைகள்! என்று எவரேனும் வாதிட முனைந்தாலோ, வைதீக நெறியினர், விழியை வாளாக்கிவிடுவர்! அவ்வளவு அசைக்கமுடியாத அளவிலும், தன்மையிலும், அறியாமை, பாறையாகிக் கிடக்கிறது.
மற்றும் சிலர், மதியிலே சிறிது தெளிவும், மனதிலே மிகுதியான சூதும் நிறைந்தவர்கள், “மச்சாவதாரம் எடுத்தாரா பகவான் இல்லையா, என்பது கிடக்கட்டும், மச்சாவதாரம் என்பது உண்மையா, அல்லது உயரிய தத்துவார்த்தத்தை உணர்த்த ‘ஞானஸ்தாள்’ தயாரித்த விளக்கக் கதையா என்பதுகூடக் கிடக்கட்டும், எங்கும் கடல் மயம்—எவை மனிதகுல மேம்பாட்டுக்கு உயிரோ, அந்த வேதங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற நெருக்கடியான நிலைமை—அந்த நெருக்கடியைத் தீர்க்க, ஆண்டவன், ஆனையாக வடிவெடுத்தால் முடியுமோ, சிங்கமானால் சிக்கல் தீருமோ, புலியாக மாறினால் தீருமோ,—முடியாதல்லவா!—ஆகவேதான் மச்சமாக, மீனாக, வடிவெடுத்தார், என்று, எவ்வளவு அழகிய, அறிவு செறிந்த கற்பனையுடன், கதை தீட்டினர், பண்டு வாழ்ந்த, பரமனருள் பெற்றோர்! பண்டைய பெருமையை அறியாதானே! இந்த மனவளம், கற்பனைத் திறம், நம் நாட்டு, சிரேஷ்டர்களிடம் காணமுடியுமே தவிர, வேறு எந்த நாட்டிலேனும் இத்தகு, கற்பனை அலங்காரத் திறமை கொண்டவர்கள் உண்டோ?”—என்று கேட்பர்—