உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

7


பிடரியில்பட ஓடிவிட்டான், பிழைத்தால் போதும் என்ற பயம் பிடித்துக் கொண்டது அந்தப் பெருவாயனுக்கு” என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பர். ஆனால் அதே மக்கள் சாக்ரட்டீஸ் காலத்திலே என்ன பேசி இருப்பர்? “சாக்ரட்டீஸ் நமது கடவுள்களை நிந்திக்கிறானே, அவன் நாசமாய்ப்போக” என்று தூற்றியவர்கள்கூட, சாக்ரட்டீஸ், தான்கொண்ட கொள்கைக்காக உயிரைத் திரணமாகக் கருதி, சிறையில் கடுவிஷத்தைச் சிறிதும் சித்தம் கலங்காமல் குடித்து இறந்தான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திகைத்துப் போயிருப்பர். தங்களுடைய “விரோதி” ஒழிந்தான், இனிப் பயமில்லை, என்ற மனநிலை அல்ல; “உயிரைக்கூட இழக்கத் துணிந்தானே!” என்று பயந்திருப்பர்; பேசவும் நாவெழாத நிலை பிறந்திருக்கும். சாக்ரட்டீஸ், பிணமான அன்றுதான், பகுத்தறிவுக்குப் புதியதோர் களை, சக்தி, மதிப்பு, பிறந்தது என்று கூறலாம். ஊரார் அல்லவா விரட்டினர் டையகோராசை! சாக்ரட்டீஸ் நாட்களிலே, ஊரில் இரண்டு கட்சி! பகுத்தறிவு, தனக்கு ஓர் இடம் தேடிக்கொண்டது. பகுத்தறிவின் சார்பிலே பேச, ஆதரவு தர, ஊரிலே ஒரு பகுதி மக்கள் திரண்டுவிட்டனர். சாக்ரட்டீஸ், குற்றவாளியா அல்லவா என்பதை விவாதிக்கக்கூடிய நீதி சபையிலே 501 பேர் இருந்தனர். சாக்ரட்டீஸ் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறினவர்கள் 281. சாக்ரட்டீஸ் குற்றவாளி அல்ல என்று கூறினவர்கள் 220. பகுத்தறிவு, பழைய கால அமுலுடன், ஏறக்குறைய சரிசமமாகப் பலம் சேர்த்துக் கொண்டுவிட்டது. 61 பேர் அதிகம் பழைமைப் படைக்கு! சாக்ரட்டீஸ் பிணமான பிறகு, படைபலத்தின் நிலை தலைகீழாக மாறிவிட்டது! அவர் இருந்தபோதுங்கூட, டையகோராஸ் பயந்து ஓடிவிட நேரிட்டதுபோன்ற நிலைமை இல்லை. 501 பேரில் 220 பேர், பகுத்தறிவுக்காகப் பரிந்துபேச முன்வந்தனர்! இதன் பொருள் என்ன? முதலில் ஊரே பகைத்-