உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மாஜி கடவுள்கள்


தமது மேதாவித்தனமும் நிலைக்கும், பழைய முறையும் பிழைக்கும் என்ற நம்பிக்கையுடன்

மச்சாவதாரம்!—என்பது அவர்கள் கூறுவதுபோல, மனவளமும் மார்க்கத்தெளிவும், கற்பனைத் திறமும் கலை ரசனையும், கொண்ட நமது நாட்டுப் புராணீகர்களின் பிரத்யேகச் சரக்கு—அவனியில் இதுபோல வேறெங்கும் சுற்பனைத்திறம் காட்டப்பட்டதில்லை, என்று ஆராய்ச்சியாளர் எவரும் துணிந்து கூறார். ஏனெனில், மனித குலம் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளிலே இதுபோன்ற கதைகளைத்தான் கட்டி வைத்தனர்—இது போன்ற கடவுள்களைத்தான் தொழுது வந்தனர்.

மச்சாவதாரம்—இங்கு மகாவிஷ்ணு மட்டும்தான் எடுத்தார் என்று எண்ணிவிடாதீர்கள்.

பாபிலோனியா நாட்டுப் புராணீகன், உலக மகாப் பிரளயத்தை வர்ணிக்கிறான். இங்கு, நம் நாட்டுப் புராணீகன் சித்தரிப்பது போலவே—அது மட்டுமல்ல—பாபிலோனியாவிலேயும், ஆண்டவன் மச்சாவதாரம் எடுத்தார் என்று கூறுகிறான்.

பாபிலோனியா நாட்டு முழுமுதற் கடவுள் ஈயா! வடிவம், மீன! எரிடு எனும் திருத்தலத்தில், ஈயா கடவுளுக்கு, அற்புதமான ஆலயம் கட்டி, விதவிதமான விழா நடத்தி. பாபிலோனியா மக்கள், தொழுது வந்தனர். புதை பொருள ஆராய்ச்சியாளர்கள், ஈய கோயிலின் கலனான பகுதிகளைக்கூடக் கண்டறிந்து கூறியுள்ளனர். ஈயா, சர்வ ரட்சகன்—சர்வ வல்லமை பொருந்தியவன்! கடலிலேதான் அந்தக் கடவுள் வாசம் செய்துவந்தார்! ஒவ்வொரு நாளும் கரை வருவார், மக்களை அழைப்பார், அவர்களுக்கு அறிவூட்டி, அருங்கலைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார்.