உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மச்சாவதாரம்

197


பயிர்த்தொழில் முதற்கொண்டு பானை சட்டி செய்யும் தொழில் வரையிலே, மீன்தேவன், கற்றுக் கொடுத்தார்! பாபிலோனியா நாட்டு மச்சக் கடவுள்தான், சட்டம் வகுத்துத் தந்தார். சகல அறிவும், அவரிடமிருந்தே மக்களுக்குக் கிடைத்தது! அண்டபிண்ட சராசரத்தையும், ஆதி மனிதனையும் அவர்தான் ஆக்குவித்தார்—ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பாபிலோனியா நாட்டு மக்கள், இந்த மச்சாவதாரத்துக்கு மகோன்னதமான ஆலயம் கட்டிக் கொண்டாடி வந்தனர். சலவைக் கல்லால் கோயிற் படிக்கட்டுகள், சர்வேஸ்வரன் ஈயாவுக்கு! மச்சாவதாரத்துக்கு இங்கு உள்ளதைவிட, மகிமை அதிகமாகவே இருந்தது, பாபிலோனியாவில்! ஆனால், எதுவரையில்? உண்மை அறிவு பிறக்கும் வரையில்! அறிவுக் கதிர் கிளம்பிற்று, ஈயா விடை பெற்றுக்கொண்டார்—மாஜி கடவுளானார்! ஆராயும் திறன் பிறந்தது, அர்த்தமற்ற கதையை அந்த நாட்டு மக்கள் மறந்தனர்! இன்று, பாபிலோனியாவிலே, மச்சாவதாரத்தைப்பற்றிப் பேசிப் பூஜித்திட, பித்தரும் முன் வருவதில்லை. மனித குலத்தின் மனமருளின் விளைவுகளிலே ஒன்று இந்த விசித்திரத் தேவன் என்று கூறுவர். அறிஞர்கள், உண்மைக் கடவுள் நெறியை அறிந்ததும், அந்த மக்கள், உதவாக்கரைகள் கட்டிவிட்ட, அர்த்தமற்ற கதைகளிலே காட்டப்படும் கடவுளரைத் தொழ மறுத்தனர்! பிரபஞ்ச உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை பற்றி, தெளிவான கருத்து கிடைத்ததும், ஏமாளிகள் நம்புவதற்காக எத்தர்கள் தீட்டிய, பழைய கதைகளைத் தூக்கி எறிந்தனர்! அங்கு!! ஆனால் இங்கு? இன்றுகூட, மச்சாவதாரத்தை நம்பியாகவேண்டும், அவனே ஆத்தீகன் நம்ப மறுப்பவன் நாத்திகன், என்றல்லவா பேசுகின்றனர்—பாமரர் மட்டுமல்லவே, படித்தவர்கள் என்ற பட்டயத்தைச் சுமந்து திரிபவர் பலரும்கூட அல்லவா பேசுகின்றனர்! பாபிலோனியா, தனது மச்சாவதாரத்தை, அழு-