மச்சாவதாரம்
199
கடவுள் என் இருவகை! சாகும் கடவுள் உண்டு, சாகாக் கடவுள் உண்டு! இப்படி பாபிலோன் புராணம் இருந்தது. புத்தறிவு பிறந்ததும், கடவுள்கள் என்ற சொல்லே, கடவுளை அறியாதானின் பேச்சு, என்ற எண்ணம் வெற்றி கொண்டது. விளக்கமறியாதாரின் வெட்டிப் பேச்சு, கடவுள்களை நடமாடவிட்டன என்ற நல்லறிவு பிறந்தது! கடவுள்கள் என்று கூறினாலே கைகொட்டிச் சிரிக்கலாயினர், கருத்துத் தெளிவு பெற்றோர்! இனி நமக்கு வேலையில்லை, என்று கண்டுகொண்டதாலோ என்னவோ, பாபிலோனியக் கடவுள்கள், மாஜிகளாயின! கோயில்களிலே கொலுவீற்றிருந்துகொண்டு கோலாகலமான வாழ்க்கை நடத்திவந்த கடவுள்கள், மாஜிகளாயின! கோல்கொண்டோரும் வேல்கொண்டோரும், தாள் பணியவும், நரபலியிலிருந்து நவரத்ன ஆபரணம் வரையிலே பக்தர்கள் காணிக்கை செலுத்தவும், புலவர்கள் பாடவும், பூஜாரிகள் ஆடவும், அளவற்ற கீர்த்தியுடன், ஆலயங்களிலே அரசோச்சி வந்த கடவுள்களெல்லாம், மாஜிகளாயின! தத்துவார்த்தம் பேசி, அந்தக் கடவுள்களை யாரும் இன்று வழிபடுவதில்லை! காவியமெருகு தரப்பட்டிருக்கிறது; எனவே கருத்தற்றது எனினும், இதனைத் தள்ளிடல் தீது, என்று பேசுவார் அங்கெலாம் இல்லை! காகமாயிரம் கூடினும் ஓர் கல்லின்முன் எதிர் நிற்குமோ என்றபடி ஆகிவிட்டது அங்கு! இங்கு? புதிதாகத் தந்தாலும், பத்தோடு பதினொன்றாகச் சேர்த்துக்கொள்ளச் சித்தமாக உள்ள பக்தர்களல்லவா உள்ளனர்! தங்கத்தால் கழலணி செய்தான் பிறகும், இரும்பு வளையத்தைக் காலிலிருந்து கழற்ற மறுப்பது மதியீனம் என்றுதானே, எவரும் கூறுவர்! கண் இரண்டு இருந்தால் மட்டும் போதாது, பக்கத்திலே ஒரு புண் இருந்தாக வேண்டும் என்று கருதி, முகத்தைக் கூர்வாள் கொண்டு