208
மாஜி கடவுள்கள்
களின் கோபம்தான் அடங்கிற்று, புத்தறிவின் வேகம் அடங்கவில்லை. இஷ்டாரும் அலாட்டூவும், பிறவும், அந்த நாட்டு மக்களின் கருத்தை விட்டகன்று, யாரேனும் கவனப்படுத்தினாலும், அது எங்கள் பழம் பழம் மூதாதையர்கள் அறிவுக் குழப்பத்தின்போது உண்டானவை, என்று கேலியுடன் பேசும் நிலை பிறக்கும்வரை, புத்தறிவுப் பிரசாரம் ஓயவில்லை.
அங்கும், இங்குபோல், இத்தகு கதைகளை, அப்படியே பார்த்தால், அறிவுக்குப் புறம்பாகவேதான் தோன்றும். ஆனால் இஷ்டாரைச் சக்தியாகவும், டாமூஜ் எனும் தேவனை இன்பமாகவும், அலாட்டூ தேவியைத் துன்பமாகவும், வைத்துக், கதையைப் பார்த்தால், ஆழ்ந்த கருத்து விளங்கும் என்றுகூடக் கூறிப் பார்த்தனர். ஆனால் இளைஞர்கள் சிரித்தனர்.
துன்பத்தைத் துடைத்து இன்பம் பெறச் சக்தியால் முடியும் என்ற தத்துவத்தை, சாதாரணமாகவே, நாங்கள் புரிந்துகொள்வோம், புராணிகரே! அதற்காக நீர், ஆறு வாயிலுள்ள அரண்மனைக்கு அழைத்துச் சென்று, எம் எதிரே ஆடை இழந்த அழகியை நிற்கவைத்து, கோரமுகத் தேவனைக் காட்டி, ஏன் கொடுமைப்படுத்துகிறீர்—என்று கேட்டுக் கை கொட்டிச் சிரித்தனர். நாளாகவாக, இந்தத் ‘தேவதைகள்’ மதிப்பிழந்து, மக்கள், உண்மை அறிவை நாடலாயினர். அந்த நீண்ட பயணம், இன்று உலகிலே பெரும் பகுதியிலே, ஒரே தெய்வ வழிபாடு என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது. இங்கோ, முப்பத்து முக்கோடி தேவரும் இருந்தாக வேண்டும் என்று வாதாடுகின்றனர். அவர்களைப்பற்றி உள்ள கதைகளிலே காணப்படும் ஆபாசங்களை எடுத்துக்காட்டினாலோ, மூக்கும் முழியும் சிவக்க, முறைத்துப் பார்க்கின்றனர்.