210
மாஜி கடவுள்கள்
மிக்கன என்று கருதப்பட்டு, பாராண்ட மன்னரின் குமாரிகளையேகூடப் பலி கேட்டுப் பெற்று, விண்ணை முட்டும் கோபுரங்களும், விகசிதமணி மண்டபங்களும் படைத்துச், சுட்டுவிரலையே செங்கோலாக்கிக் கொண்ட பூஜாரிகள் புடைசூழ வீற்றிருந்த ‘தேவதைகள்’ இன்று, தேடித் தேடிப் பார்த்தாலும் காணமுடியாத நிலை, அங்கெல்லாம் ஆகிவிட்டது. இதனால் அங்கெல்லாம் அஞ்ஞானமும் நாத்திகமும் தலைவிரித்தாடிற்று என்றோ, அருள்மொழி மடிந்து மருளுரை மிகுந்தது என்றோ, கூறுவதற்குமில்லை. அந்த நாடுகளெல்லாம், நமது நாட்டைவிட நல்ல நிலையிலேயே உள்ளன; நாசமுறவில்லை.
மாடி வீடு கட்டுவதற்கு, முதலில், மரம் கொண்டோ, வெறும் மண்மேடாகக் கொண்டோ, கட்டடமமைப்போர் பணிபுரிவர்—ஆனால் அடுக்கு உயர உயர, அந்த முறை மாறும்—மாடி வீடு கட்டியானதும், முதலிலே நிறுத்திய, மரக்குவியல், அல்லது, மண் குவியல், இதனை, வைத்துக் கொண்டிரார்—நீக்கிவிட்டு, மாடி சென்று உலவுவர். கதிர் முற்றியதும், பயிரை அழிப்பதா, இப்பயிரன்றோ கதிர் அளித்தது, என்று எண்ணமாட்டார்கள்—அறுவடை செய்வர்—எந்தப் பயிர், செந்நெல்லைத் தந்ததோ, அதனை மிதிப்பர், துவைப்பர், அடிப்பர்.
கருத்துலக அறுவடையும் அதுபோன்றதே. இதனை அறியாதார், ஆயாசமடைவர்—ஆர்ப்பரிக்கவும் செய்வர். அவர்களேகூட, இம்முறை, அவனியில் பல்வேறு இடங்களிலும் நடந்ததேயன்றி வேறல்ல, புதிதுமல்ல, பொல்லாங்கு நிரம்பியதல்ல, புல்லறிவாளர் போக்கல்ல, என்பதை அறிவர். அதற்காகவே, கற்பனைத் திறனுடனும் காவிய ரசனையுடனும், பண்டை நாட்களிலே, இங்கு, ஆக்கப்பட்ட அருமையான தேவதைகளைப்போல, பலவற்றை