தவளைமுகத் தேவி
213
தெரியவில்லை. தென்றல் இனிமை தருகிறது, புயல் அழிவை உண்டாக்குகிறது! கதிரவனால் ஒளியும் கிடைக்கிறது, சில நேரத்திலே கொதிப்பும் ஏற்பட்டுவிடுகிறது! திங்கள் தேய்கிறது, வளர்கிறது, மீண்டும் மீண்டும். நட்சத்திரங்கள் மின்னுகின்றன, “ஏ, மானிடனே! சொல்லு பார்க்கலாம், நாங்கள் எங்கே இருக்கிறோம்! யார் நாங்கள்! எவ்வளவு உயரத்திலே இருக்கிறோம் பார்த்தாயா! முடியுமா உன்னால், இங்கு, வருவதற்கு!” என்று கேலி பேசுவதுபோல! ஒவ்வொரு இயற்கைப் பொருளும், நிகழ்ச்சியும், நன்மையோ தீமையோ தரத்தான் செய்கிறது—எனினும், அவைபற்றி அவனுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தன் வாழ்வுடன் நீக்கமுடியாத தொடர்பு கொண்ட இயற்கையின் பொருளை அறிந்தாக வேண்டும் என்ற எண்ணம், மனதைக் குடைகிறது. அண்ணாந்து பார்க்கிறான் மேலே! என்னதான் இருக்கிறதோ......ஆச்சரியப்படுகிறான்! கடலைக் காண்கிறான், பொங்கும் அலை மயமாக இருக்கிறது—அதன் கரை எது? தெரியவில்லை; திகைக்கிறான். பயங்கரமான இடி! கண்ணைப் பறிக்கும் மின்னல்! எதற்கும் பொருள் தெரியவில்லை, எதையும் பொருட்படுத்தாமலும் இருப்பதிற்கில்லை. ஏனெனில் ஒவ்வொன்றும் மனிதனை பாதிக்கிறது. பலன் தெரிகிறது—பொருள் தெரியவில்லை!
இந்த மனநிலை, எந்த நாட்டிலேயும், அறிவு வளரா முன்னம் இருந்த பொதுவான நிலை!
விளக்கம் தேடினான்—ஒவ்வொன்றுக்கும்!
எல்லாவற்றுக்கும் மூலம் என்ன? எது முதல்! கடலா காற்றா, விண்ணா மண்ணா, மனிதனா மிருகமா, செடி கொடியா—விளங்கவில்லை!