உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மாஜி கடவுள்கள்


திலும் காட்டினர், கலாவாணர்கள்! அவனுக்கு, காணிக்கை குவித்தனர் குன்றுபோல, பாமரர். அமோகமான செல்வாக்குடன் அரசோச்சி வந்தான் ரா தேவன், அறிவு வெளிக்கிளம்பும் வரை, பிறகோ, ரா தேவன், மாஜி கடவுளானான்.

ரா, மாஜி கடவுளாகா முன்பு, அந்நாட்டுக் காளிதாசனும் கம்பனும், காவிய மாலைகள் பலப்பல சூட்டிக் காட்டினர், பாமரர் வீழ்ந்து வணங்கி வந்தனர். ஈஜிப்ட் நாட்டு மக்களின் இதயத்தை உருக்கக்கூடிய விதமான அருட்செயல்கள் பல செய்தவர், இந்த ரா தேவன்—அந்த காட்டுப்புராணத்தின்படி.

மண்ணைப் படைத்த மாதேவன், மானில மன்னனுமானான்.

மக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, அன்பாட்சி நடத்திவந்தான், ரா தேவன்.

ரா தேவன், பூலோகவாசியாக இருந்தபோது, இசிஸ் தேவியும், பூலோகத்திலே இருந்தாள். அவளுக்கு, ரா தேவனுக்கு இருந்த சர்வ வல்லமை தனக்கும் வேண்டும் என்ற பேராசை! அந்தப் பேராசை கொண்டதால், இசிஸ் தேவி, சூழச்சி செய்த வண்ணம் இருந்தாள், ஆதிக்கம் பெற!

கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும், பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்திலே துவக்க வகுப்பில் உள்ளவர்களுக்குக்கூட!

போட்டா போட்டி! பொறாமை! பேராசை! சூழச்சி, ஆதிக்க வெறி!!—இவை மனித வர்க்கத்திலேயே மட்ட ரகங்களின் குணமல்லவா—இந்தக் குணம் கொண்ட