உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவளைமுகத் தேவி

221


வரனாக இருக்கிறேன்! அப்படிப்பட்ட மந்திரச் சொல்லைக் கேட்கிறாயே—முறையல்ல” என்று வாதாடுகிறார், ரா.

சர்வேஸ்வரன் சாகக் கிடக்கிறார்! அறிவுக்குத் துளியும் பொருந்தாத கூற்றாக இருக்கிறதே, என்று கூறுவீர்கள்! அது, அந்த நாள் ஈஜிப்ட் ஆத்தீகம்!

கடைசியில், வேறு வழியின்றி, ரா தேவன், இசிஸ் தேவியின் நிபந்தனைக்கு இசைந்தான். மந்திரப் பெயர், இசிசின் மனதுக்குச் சென்று பதிவாகிவிட்டது—மாயப் பாம்பு கடித்ததால் மகேசனுக்கு ஏறிப்போயிருந்த கடு விஷமும் வெளியே வந்துவிட்டது, முழுமுதற் கடவுள் பிழைத்துக்கொண்டார்.

கடவுளுக்காவது விஷம் ஏறுவதாவது, பேராபத்து வருவதாவது, அதனின்றும், பெம்மான் தப்புவதாவது, இதெல்லாம் என்ன கட்டுக்கதை—யார் நம்புவர் இதனை, என்று கேட்டுவிடுகிறோம் சுலபமாக. ஆனால் இவைகளை தேவ ரகசியங்களாக மதித்திருந்தனர். எல்லா நாடுகளிலேயும் இப்படிப்பட்ட கதைகள் இருந்தன! கடவுளுக்கு நோய்! கடவுளுக்கு ஆபத்து! கடவுள் கிழவராவது! கடவுள் சாகக்கிடப்பது!—இவைகள் அந்த நாட்களிலே இருந்துவந்த நம்பிக்கைகள். நம்ப மறுப்பவன் நாத்தீகன்—இன்று அல்ல! இன்று, மாயப் பாம்பால் மகேசன் பட்ட அவதிபற்றி, ஈஜிப்ட் நாட்டிலே, நம்பும் பேதைமை கிடையாது. அறிவு துலங்கிவிட்ட பிறகு, அர்த்தமற்ற அந்தக் கதையைத் துச்சமென்று கருதித் தூரத் தூக்கி எறிந்துவிட்டனர்—அங்கு. ஆனால், இங்கு? அதோ உற்றுக் கேளுங்கள், “ஆலகால விஷத்தை எடுத்து, என் அப்பன், கைலைவாசன், உமையவள் நேசன், உட்கொள்ள, பக்கமிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவர்களெல்லாம், பதை பதைத்து, ஐயகோ! ஆலகாலத்தை உண்டாரே,