உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மாஜி கடவுள்கள்


இனி, ஈசன் அதோகதியாகிவிடுவாரே, உள்ளே சென்றதும், ஆலகாலம், அரனாரின் உயிரைக் குடித்துவிடுமே, பரமசிவனைப் படுசூரணமாக்கிவிடுமே, என் செய்வோம், எவ்வாறு உய்வோம் என்று புலம்பினர். பார்வதி அம்மையார் தன் பர்த்தாவுக்கு வந்துற்ற பேராபத்தைக் கண்டு, பதைபதைத்து, துடி துடித்து, பரமசிவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “நாதா! நான் என்ன செய்வேன்” என்று கதறிட, அம்மையின் ஆலிங்கனத்தின பலனாக, சிவனாரின் கழுத்திடம் சென்ற சக்தியின் கரத்தின் வலிமையினால், ஆலகாலம், ஐயனின் உள்ளே செல்ல முடியவில்லை—கண்டத்தோடு நின்றுவிட்டது—சிவனார் பிழைத்தார்—நீல கண்டனானார்!”—என்று புராணீகன் பாடுவது, செவியில் விழும்—இப்போதும்!

இதுபோல, இன்று ஈஜிப்ட்டில், ரா தேவன் மாயப் பாம்பு கடித்ததால் சாகக்கிடந்தது, பிறகு இசிஸ் தேவியால் பிழைத்த புராணம் படிப்பவரைக் காணமுடியாது. மெய்யறிவு பிறந்ததும் பொய்யுரையைத் தள்ளிவிட்டனர்! ரா தேவன், மாஜி கடவுளாகிவிட்டான். இங்கோ, ஆலகாலம் உண்ட புராணம், இன்றும் ஆட்சி செய்கிறது—மறுப்பவனை மாபாவி என்று கண்டிக்கும் மதியினர் ஏராளமாக உளர்.

மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மகேசனுக்கு, இடர் அடியோடு ஒழிந்துவிடவில்லை

“எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் கிழத்தின் ஆட்சியிலே இருப்பது”

“செத்தும் தொலைக்கக் காணோம், படுகிழமான பிறகும், பட்டத்தரசனாக இருந்து வருகிறது”

“இனி இந்தக் கிழத்தேவனை நம்பிப் பயனில்லை.”