224
மாஜி கடவுள்கள்
ரா தேவன் சிருஷ்டித்த சொர்க்கலோகத்தின் பெயர், ஆலு என்பதாகும்.
பூலோகத்திலே, ரா தேவனுக்குப் பிறகு, ஆசரிஸ் தேவனும் அவன் மனையாட்டியாகிவிட்ட இசிஸ் தேவியும் ஆண்டு வந்தனர்.
ஆசரிசின் ஆட்சி, பொற்காலம்! காட்டுமிராண்டித்தனத்தில் இருந்த மக்களைச் சீர்திருத்திடும் நல்லாசானாக இருந்தார் ஆசரிஸ். உழவு, தொழில், கல்வி, கலை, யாவும் அவன் தந்த அருங்கலைகளே, அவன் ஆட்சியால் மாந்தர் பயன் பெற்றனர். ஆனால், ஆசரிஸ் தேவனின் தம்பி; செட் தேவனுக்கு, இது பிடிக்கவில்லை. அவன் தீயோன்! எதியோபியா நாட்டவரான 72 முரடர்கள் அவனுக்கு நண்பர்கள். இந்தக் கும்பல், ஆசரிசை ஒழித்துவிட்டு, செட் மன்னனாவதற்காகச் சூழ்ச்சி செய்து வந்தது.
ஆசரிசுக்கு ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர், வெற்றி விழா கொண்டாட. அதுசமயம், செட் எனும் தீயதேவன், ஓர் அற்புதமான பேழையைச் செய்து விருந்தினருக்குக் காட்டினான். அதைப் பெறப் பலரும் விரும்பினர். யார் அதனுள் படுத்தால், பொருந்துகிறதோ, அவருக்கே பேழை தரப்படும் என்றான் பேய்க் குணம் படைத்த செட் தேவன்! பலர், பேழையுள் நுழைந்தனர்—பொருந்தவில்லை. ஆசரிஸ் தேவன் பேழையுள் படுத்தான்—பொருத்தமாக இருந்தது! இதேபோது சூழ்ச்சிக்கார செட், பேழையை மூடி, மூடிமீது ஆணிகளை அறைந்து, பேழையை நைல் நதியிலே வீசி எறிந்துவிட்டு, எதிர்த்தோரை அழித்துவிட்டு, தானே அரசன் என்று அறிவித்துவிட்டான்.