10
மாஜி கடவுள்கள்
இன்று கும்பிடப்படுவதில்லை கோயில் இல்லை, கொட்டு முழக்கில்லை, எந்தெந்தத் தெய்வங்கள் எந்தெந்த நாட்டிலே இருந்தனவோ அந்த நாடுகளிலே இன்று சென்று கேட்டால், அந்தக் கடவுளரைக் காட்டமுடியாது! சாக்ரட்டீசைச் சாகடித்த கிரேக்க நாட்டிலே இன்று சாக்ரட்டீசுக்காகப் பரிந்துபேசவும், வாழ்த்தவும் மக்கள் உள்ளனர். ஆனால், எந்தத் தெய்வங்களைச் சாக்ரட்டீஸ் நிந்தித்தார் என்று குற்றம் சாட்டி விஷம் கொடுத்து அவரைக் கொன்றனரோ அந்தக் கடவுளர்கள் இன்று அங்கே இல்லை. இப்படி எல்லாமா கடவுளர் இருந்தனர்? இவ்விதமாகவா நீங்கள் கூத்தாடினீர்கள்? இவ்வளவு ஆபாசமாகவோ கடவுளைப்பற்றிக் கதை இருந்தது என்று கேட்டால், வெட்கப்பட்டு, அறிவுத் தெளிவு இல்லாத நாளிலே, அஞ்ஞான இருள் இருந்த காலத்திலே, காட்டுமிராண்டிகளாக இருந்தபோது, பல கடவுள், கடவுளுக்குப் பல உருவம், கடவுளுக்குத் தாய் தகப்பன், பிள்ளை குட்டி, கூத்தி குடும்பம், என்றெல்லாம் கூறினோம், காவியம் எழுதினோம், கோயில்கள், கட்டினோம்; அறிவு பிறந்ததும், அத்தனை கடவுளரும் அர்த்தமற்ற கற்பனை என்பதை அறிந்தோம், என்று கூறுவர். சாக்ரட்டீஸ் குடித்த விஷம், பலப்பல சாமிகளைச் சாகடித்தது.
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும். உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான், சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர் தோன்று முன்பு, கிரீசிலும் ரோமிலும், நார்வேயிலும் ஸ்வீடனிலும், சீனாவிலும் எகிப்திலும், எந்த நாட்டிலும், விதவிதமான கடவுள் கூட்டம் இருந்துவந்தன. புராண இதிகாசங்களும்,