உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவளைமுகத் தேவி

227


காலத்திலோ, எத்தன் தீட்டி ஏமாளிக்குத் தந்த கற்பனைகள் யாவும், மதிக்கப்படுகின்றன. மந்த மதியினரும் சொந்த மதியற்றவர்களும் மட்டுமே இந்தப் புராணச் சேற்றிலே நெளிகிறார்கள் என்றும் கூறிவிட முடியவில்லை. மேதாவிகள் என்ற விருது பெற்றவர்களும், தத்துவார்த்தம் ஏதேனும் கூறிக்கொண்டு பழமையில் நெளிந்திடக் காண்கிறோம். இந்த இலட்சணத்தில், சிலர் பெருமை வேறு பேசிக் கொள்கிறார்கள். புராணம் புளுகாகவே இருக்கட்டும், இப்போது புராணங்கள் தேவை இல்லை என்றுகூட ஒப்புக்கொள்வோம், ஆனால், அந்தப் புராணங்களிலே, நமது முன்னோர்களின் கற்பனைத்திறமை, எவ்வளவு அருமையாக இருக்கிறது, என்பதைப் பார்க்கும்போது பூரிப்படையாமலிருக்கமுடியுமா!—என்று பேசுகின்றனர். ஈஜிப்ட், பாபிலோன், மற்றும் பற்பல நாட்களிலேயும் இதே மனவளம்—கற்பனைத் திறம்—காவியம் ஓவியம்—தத்துவார்த்தம்—போதுமான அளவுக்கு இருந்தன, எனினும் அவை யாவும், இருட்டறிவின் விளைவுகள் என்று தீர்மானிக்கப்பட்டு தள்ளப்பட்டுவிட்டன என்பதை நம் நாட்டுப் பெரும்பாலான மக்களுக்கு, ‘மேதைகள்’ எடுத்துக் கூறுவதில்லை. பிரபஞ்ச உற்பத்தி, கடவுள் அவதாரம், மோட்ச நரக அமைப்பு முறைகள், போன்றவைகள், ஏதோ, இங்கு மட்டுமே பூத்திட்டவைகள் போலவும், மற்ற எந்த நாட்டிலேயும், கற்பனைத் திறமை இருந்ததே கிடையாது போலவும் மார் தட்டிக் கொள்கின்றனர். புராணப் பண்ணையிலே புரட்டர் விதைத்த விதை விசித்திரமான விளைவுகளை எல்லா இடங்களிலேயும்தான் தந்தது! பாபிலோன், ட்யூடன், ஈஜிப்ட் போன்ற நாட்டவர் முன்பு நம்பிக்கொண்டிருந்த பிரபஞ்ச உற்பத்தி விளக்கக் கதைகளிலே, என்ன ரசம் குறைந்திருக்கிறது! வர்ணனைகளுக்குக் குறைவா! உவமைகள் இல்லையா!