உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மாஜி கடவுள்கள்


உள்ளத்தை உருக்கும் சம்பவங்கள், திடுக்கிடச் செய்யும் திருவிளையாடல்கள், இல்லையா! சாவித்ரி, சத்யவானை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சி பற்றிய புராணக் கதையிலே காணப்படும் ரசங்களைவிட, இசிஸ் தேவி, ஆசரிஸ் தேவனைக் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிபற்றி, ஈஜிப்ட் நாட்டுப் புராணீகன், அதிகமாகத்தானே புளுகி வைத்திருக்கிறான். கற்பனை அலங்காரத்துக்காகவாவது, புராணங்களைப் பாதுகாத்தாக வேண்டும் என்று இங்கு சில பழமைப் பித்தர்கள் பேசுவதுபோல, ஈஜிப்ட்டில் பேசினரா! தூக்கி எறிந்துவிட்டனரே, பழைய கூளத்தை! நாடு பாழ்பட்டாவிட்டது! மக்கள், சன்மார்க்கத்தை இழந்தா விட்டார்கள்! இல்லையே! அறிவல்லவா அங்கெல்லாம் ஆட்சி செய்கிறது. ஆமை வராக அவதார மேன்மையை அன்றுபோலவே இன்றும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் மக்கள் இங்கு மட்டுந்தானே உள்ளனர்.

மோட்சம்—நரகம்—என்ற கற்பனையை எடுத்துக் கொண்டு பார்ப்பதா, பார்ப்பதானாலும், நம் நாட்டுப் புராணத்தோடு வெற்றிகரமாகப் போட்டியிடக் கூடியதாகவே, ஈஜிப்ட் புராணம் இருக்கிறது.

ஈஜிப்ட் புராணப்படி சொர்க்கலோகம், புண்யவான்கள் இருப்பிடம்.

பாப—புண்ய பரிசீலனைக்கு மேலுலகிலே ஓர் இடம், அதற்காகத் தனியாக ஒரு கடவுள்.

மனிதன் இறந்த பிறகு அவன் ஆவி, மேலுலகம் செல்லும் வர்ணனை, நம் நாட்டுப் புராணத்தை மிஞ்சக் கூடியதாகவேதான் இருக்கிறது—புளுகின் அளவிலே!!

ஆவி, தன்னுடன் போதுமான உணவு எடுத்துக்கொண்டு கிளம்புகிறதாம் மேலுலகுக்கு.