230
மாஜி கடவுள்கள்
வேண்டும். அந்த வாக்குமூலம், உண்மை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதும், அனுபிஸ் என்ற கடவுள், ஆவியின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய், ஆசரிஸ் தேவன் முன் நிறுத்துவான். இந்த அனுபிஸ், நரிமுகத் தேவன்!
அந்த நீதிமன்றத்திலே ஒரு துலாக்கோல் இருக்கும். ஒரு தட்டிலே, ஆவியின் இருதயத்தைப் போட்டு, மறு தட்டிலே, நெருப்புக் கோழியின் சிறகு ஒன்றைப் போட்டு நிறை பார்க்கப்படும். சரியாக இருந்தால், சொர்க்கம்—இல்லை என்றால், 42 மிருக தேவர்களும் மேலே விழுந்து கடித்துக் கொடுமைப்படுத்தி, நரகத்துக்கு விரட்டுவர். ஆவியை!
சொர்க்கலோகம் செல்லும் ‘பாக்யம்’ கிடைத்தாலோ, அங்கு சுகபோகத்துக்குக் குறைவே கிடையாது.
ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று நிலம் பங்கிட்டுத் தரப்படும்—அங்கு உழுது பயிரிட்டு வாழ்க்கையை நடத்தலாம். வளம் அதிகம், எனவே, பஞ்சம் தலைகாட்டாது. சொர்க்கலோகவாசியான பிறகு, பூலோகத்திலே தன் மக்களைப் பார்க்கவேண்டுமென்று ஆவி ஆசைப்பட்டால், பறவை வடிவிலே சென்று பார்த்துவிட்டுப் பிறகு, சொர்க்கலோகம் திரும்பி வரலாம்.
இப்படி இருக்கிறது ஈஜிப்ட் புராணம்!
கற்பனைத்திறம் குறைவா இதிலே! எனினும், இன்று அங்கு, இதை நம்பியா நாசமாகிறார்கள்.
நந்தி நாரதர் இங்குதானே இன்றும் பூஜைக்குரியவர்கள். நரிமுகத் தேவன், சிங்கமுகத் தேவி, முன்புதானே அங்கு கடவுள்கள், இன்று மாஜிகளாயினவே!