உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரமிழந்த கடவுள்

235


மிகப் பெரிய செல்வாக்கு பெற்றுவிட்டது. ட்ரூயிட், வரி செலுத்தமாட்டான்—கேவலம் மன்னனா வரி கேட்பது, ஆண்டவனின் பிரதிநிதியிடம்!! போர் மூண்டால், கலப்பை தூக்கியும், கட்டை வெட்டியும், கனதனவானும், கடை கன்னிக்காரனும், வாள் தூக்குவர். ட்ரூயிட் களம் செல்லமாட்டான், ஆலயம் செல்வான், ஜெபமாலையுடன்! ட்ரூயிட்டால், யாரை வேண்டுமானாலும், ஜாதிப்பிரஷ்டம் செய்யமுடியும்.

இவ்வளவு ஆதிக்கம் செலுத்திவந்த ட்ரூயிட்டுகளின் பூண்டே அற்றுப் போய்விட்டது, அறிவு வளர்ந்ததும்! பூஜாரிகளின் பொய்யுரைகளைப் புனித உரைகளென எண்ணி ஏமாந்த மக்கள், ட்ரூயிடின் ஏவலர்களாக இருப்பதைப் புனிதமான ஒரு கடமை என்று எண்ணினர். பகுத்தறிவின் துணை கிடைத்ததும், ட்ரூயிடின் பேச்சு வெறும் புரட்டு என்பதை உணர்ந்தனர்.

பூஜாரியிடம் தரும் காணிக்கை, அவன் மூலம் ஆண்டவனுக்குச் செல்கிறது, என்று எண்ணிவந்த ஏமாளித்தனத்தால், ட்ரூயிட்டுகளிடம், அன்று பாமரர் காணிக்கை தந்து வந்தனர், அவன் கட்டளையைச் சிரமேற் கொண்டனர், அதே நிலை இன்னமும் நம் நாட்டிலே இருந்திடக் காண்கிறோம், மற்ற எல்லா வகைகளிலும் புதுமை ஒளி புகுந்தும், மதத்துறையிலே மட்டும் இருள் கப்பிக்கொண்டிருக்கக் காண்கிறோம்—துணிந்து சிலர் இந்த இருளைக் கிழித்தெறிய முனைந்தால், அவர்களை நாத்தீகர் என்று நிந்திக்கவும் மதவிரோதிகள் என்று கண்டிக்கவும், பாமரர் மட்டுமல்ல, அவர்களைப் பாமரர்களாகவே இருந்திடச் செய்ய வேண்டும் என்ற சூது மதி படைத்த ‘மேதை’கள் சிலரும் கிளம்பிடக் காண்கிறோம். பிரிட்டனிலே நெடுங்காலம், ட்ரூயிட்டுகளை தேவ தூதர்கள் என்றுதான் நம்பினர்—அவர்கள், ஆட்டி வைத்தபடி எல்லாம்