உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

மாஜி கடவுள்கள்


தான் ஆடினர்—எனினும், அறிவு வளர வளர, ட்ரூயிட்டுகளின் ஆதிக்கம் ஆடிற்று, பிறகு, வேர் நசித்தது, பெருங்காற்றின்போது வேர் நசித்த பெருமரங்கள், கீழே வீழ்வதுபோல, பகுத்தறிவுப் புயல் வீசியதும், பூஜாரிக் கூட்டத்தின் ஆதிக்கம் அழிந்துபட்டது. இன்று ட்ரூயிட்டுகளின் ஆதிக்கம், பிரிட்டனிலே பாட்டிமார், பேரப்பிள்ளைகளுக்குக் கூறும் கதையாகக்கூட இல்லை!! அந்த அளவுக்கு ட்ரூயீட்டுகளின் ஆதிக்கம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. இங்கோ!! எண்ணிப் பார்க்கும், பகுத்தறிவாளன், ஏக்கத்தைத்தான் பெற முடிகிறது! அவர் தொட்டால் பட்ட மரம் துளிர்விடும்! அவர் பாதம் பட்டால், பாலைவனம் பூஞ்சோலையாகிவிடும்! அவர் காலைக் கழுவி நீரைப் பருகினால், மலடி வயற்றிலே மாணிக்கம் பிறக்கும்!—என்று எண்ணும் மந்த மதியினரும், “ஆமாம்! அற்புதம் இல்லாமலா போய்விடும்! அவதார புருஷர்கள் இல்லாமலா உலகம் நிலைத்து இருக்கிறது!” என்று பேசி ஏய்த்திடும் கபடர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள்! ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்று கவி கூறுகிறார், இந்நாட்டு நிலையைக் கண்டு, இருள், இங்குமட்டுமல்ல, எங்கும் இருந்தது, பிரிட்டனிலே நிரம்ப இருந்தது. அந்த இருட்டரசின் அதிபர்களாக இருந்த ட்ரூயிட்டுகளின் பிடியிலே சிக்கித் தவித்தனர், பிரிட்டனில் பாமரர்! அறிவு அவர்களை விடுவித்தது! இங்கு, அறிவுக்குச் சிறை, தடை, தண்டனை, கண்டனம்! ட்ரூயிட்டுகள் இங்கு ஒழியவில்லை! பூஜாரிகளின் ஆதிக்கம் இங்கு இன்னமும் அழிந்துபடவில்லை. வானத்தைக் காட்டுகிறான், வறியோரை ஏமாற்றுகிறான்! புராணத்தைப் பேசுகிறான், பாமரரைச் சுரண்டுகிறான்! வரம் தருவார் இந்தத் தேவன், வாழைப்பழம் ஒரு குலை, தேங்காய் இருபத்தைந்து, தட்சணை எட்டு ரூபாய், என்கிறான், கொட்டிக் கொடுக்கிறான்,