உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரமிழந்த கடவுள்

237


குடிசைவாசி! கும்பி குளிர்ந்தது என்கிறான் பூஜாரி. குலை நோய் வளருகிறதே என்கிறான் குருட்டுக் குப்பன். ட்ரூயிட்டுகள் அங்கு இல்லை—இருக்க அறிவு இடமளிக்கவில்லை. இங்கு ட்ரூயிட்டுகள் இருக்கிறார்கள், அறிவு நுழையவிடாமல் ஆயிரத்தெட்டு தந்திர முறைகளைக் கையாளுகிறார்கள். புராணப் புளுகுக்கு இங்கு இன்றும் இடம் இருக்கிறது. பிரிட்டனிலும், அதுபோன்ற அறிவு வென்ற நாடுகளிலும் பல கடவுள்கள் என்ற பேச்சு கிடையாது—இன்று. ட்ரூயிட்டுகள் ஆதிக்கம் செலுத்திவந்த அன்று, பல கடவுள்கள் உண்டென நம்பிய மக்களே, பக்தர்கள்; சந்தேகிப்போர், பாபிகள்! அந்த நிலை இருந்தபோது மக்கள், மனதிலே புகுத்தப்பட்ட புராணம்தான், மூன்று நாரைகளை வாயிற் காப்பாளராகக் கொண்ட கடவுளின் கதை! பிரிட்டனிலே, இன்று அந்த நாரைகளைப் பூஜிப்பவர் கிடையாது. நாரைகளை வேலைக்கு அமர்த்திக்கொண்ட தேவனைத் தொழுபவரும் கிடையாது—இங்கு, முருகனின் மயிலுக்குப் பூஜை இருப்பதுபோல! “முருகனிடம் சென்று என் குறையைக் கூறி வருவாய், குயிலே.”—என்று இன்றும் இங்கு, குயில் மொழி மாது பாடிட, ஆயிரவர் கூடிக் கேட்டு, ரசித்திடக் காண்கிறோம். குயில், முருகனிடம் இருப்பது, என்பது புராணம், பிரிட்டனில், நாரை கொண்ட நாதன் இருந்தது போல! அந்தக் குயிலைக் கூவி அழைத்து, முருகனிடம் சென்று தன் குறையைக் கூறிவிட்டு வரும்படி, பக்தன் உருகிப் பாடுவதாக, பாவை இங்கு பண்பாடக் கேட்கிறோம்! அதிலும், ‘குறை என்ன?’ என்று, பாடலின் மூலம், தெரிந்து கொள்ளும்போது, ‘நாடே! நாடே!!’ என்று கதறிடத் தோன்றும், கருத்திலே தெளிவுபடைத்த எவருக்கும். குயில் மூலம் சொல்லி அனுப்பும் சேதி இது; நேற்றிரவு முழுவதும் நித்திரை வரவில்லை! அன்று அவர் அளித்த சுகம் என்மனதில் ஆறாத தாபத்தை மூட்டி