கரமிழந்த கடவுள்
239
தேவனின் மனைவியை அபகரித்துச் சென்றவன், பூஜைக்குரிய, வரமளிக்கவல்ல, வல்லமை மிகுந்த, அங்கஸ் என்ற, மற்றொரு கடவுள்தான்!!—அதிலும் இந்த அங்கஸ் தேவன், வேறு யாருமல்ல, மைடர் தேவனின் உடன்பிறந்தோன்! என்ன சொல்வது, பக்தர்கள்! யாரை நிந்திக்க முடியும்! நடைபெற்ற காரியமோ, பஞ்சமா பாதகத்திலே கொடியதோர் பாதகம்! செய்தவரோ கடவுள்! எப்படிக் கண்டிப்பது? கடவுள் ஒருவருக்கா இக்கதி? ஒரு கடவுளா இப்படி தீயசெயல் புரிந்தார்? கடவுளின் இலட்சணமும் குணமும் இப்படியா இருக்கும்? மனிதர்களிலேயே, கடை கெட்டவர்களிடமல்லவா இப்படிப்பட்ட இழிகுணம் இருந்திடும். அவ்வித இழிகுணம் கொண்டவர்களைச் சமூகம், கண்டிக்கும், தண்டிக்கும்! கடவுள் இப்படிச் செயவாரா!—என்று கேள்விக் கணைகளைத் தொடுத்திட, இன்று முன்வருபவர் பலர் இருக்கக்கூடும். அன்று பிரிட்டனில், அப்படிப்பட்ட ‘பாபிகள்’ கிடையாது! கடவுளின் லீலா விநோதங்களிலே இதுவுமொன்று என்று எண்ணிப் பூஜித்துவந்த ‘பக்தர்கள்’ காலம் அது. ட்ரூயிட் காலம். எனவே மைடர் கடவுளின் மனைவியைக் களவாடிய அங்கள் தேவனையும் தொழுது வந்தனர்.
கடவுளர் பலர்—குடும்பம் குடும்பமாகக் கடவுள்கள், பகுத்தறிவற்ற நிலையில் இருந்த பிரிட்டனுக்கு. ஆதி கடவுள் டானு அம்மை! அம்மையின் கணவன், பைல் தேவன். அடுத்த கடவுள் டாக்டா—இனிய முகத்தேவன். அவரவரின் நற்குணத்துக்குத் தக்க அளவு உணவுதரும் அற்புதமான பாத்திரம் கொண்டிருந்தவன் இந்த டாக்டா! வேட்டையாடிப் பிழைப்பவன், வேலை செய்து பிழைப்பவன், களவாடி வாழ்பவன், கட்டைவெட்டி வாழ்பவன், கட்டியங்கூறிப் பிழைப்பவன், களப்பணியாற்றி