240
மாஜி கடவுள்கள்
வாழ்பவன், என்று பலதிறப்பட்டவர்கள் உண்டல்லவா ஒரு நாட்டில்—அவ்விதம் உள்ளவர்கள் அனைவரும், தத்தமது உழைப்பினால் உண்டு வாழ்வதாக எண்ணமாட்டார்கள். டாக்டாவின் பாத்திரத்திலே இருந்து தரப்பட்டதை உண்டு வாழ்வதாகவே எண்ணுவர்! பாத்திரத்திலே இருந்து கிடைக்கும் உணவின் அளவு அதிகமாகும், ட்ரூயிட் பூஜாரிக்குக் காணிக்கை தந்தால், குறையும் பூஜாரியின் மனம் குளிரும்படிச் செய்யாவிட்டால்! இவ்விதமான எண்ணம் மக்களை ஆட்டிப்படைத்தது!!
டாக்டா தேவன் குதிரைத் தோலாலான பழுப்புநிற ஆடை அணிபவன்! மரத்தால் செய்யப்பட்ட யாழை வாசிப்பான்—பருவங்கள் அதனால் ஏற்படும். தீயோரை அழிக்க, பெரியதோர் கதாயுதம், இந்தக் கடவுளிடம் இருந்தது! அதை ஒரு வண்டியில் வைத்துத்தான் இழுத்து வருவார்கள்! நாலு தலையும் ஆயிரம் கால்களும் கொண்ட மாட்டா எனும் ராட்சதனை அழித்த பெருமை, உண்டு, டாக்டாவுக்கு. இந்தக் கடவுளுக்கு, பாயாசம் சாப்பிடுவதிலே, அமோகமான ஆவலாம்—நம்நாட்டுக் கோயில்களிலே இப்போதும், இன்னின்ன கடவுளுக்கு இன்னின்ன வகையான ‘பிரசாதம்’ தான் பிடிக்கும் என்று கூறப்பட்டு, நம்பப்பட்டு, செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோமல்லவா—ரங்கநாதருக்கு அக்காரவடிசலும், வெங்கடேஸ்வரருக்கு மிளகுவடையும், வரதராஜருக்கு தேங்குழலும் இட்லியும், நடராஜருக்கு பெரிய வடையும்,—விநாயகருக்கு, அப்பமோடு அவல் பொறியும், என்று அட்டவணையே தருகிறார்களல்லவா, இங்கு, அதுபோல, பிரிட்டனில், அறிவுத் தெளிவு இல்லாத நாட்களிலே, டாக்டா தேவனுக்கு பாயாசம் பிரியமானது என்று பூஜாரி கூறினான், பக்தர்கள் நம்பினர்!