உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மாஜி கடவுள்கள்


தேவன், மற்ற தேவர்களுக்கு—பன்றி இறைச்சியைப் பதமாகச் சமைத்து விருந்தளிக்கப்படுமாம்! விருந்தின் விசேஷம் இதுதான் என்று எண்ணாதீர்கள்—பன்றிகளைக் கொன்று சமைத்து, விருந்து உண்டானதும், கொல்லப்பட்ட பன்றிகள் மீண்டும் உயிர்பெற்று வருமாம்!!

பாட்ப் தேவன் தன் தேவி மாரிக்யூவுடன், கூடி வாழ்ந்து வந்தான், மக்களின் பூஜைக்குரியவனாக! பிறந்தான்—பிறந்ததும், கடவுளர் உலகு பெரும் பீதி கொண்டது—இந்தக் குழந்தையைக் கொன்றாக வேண்டும், இல்லையேல், விண்ணும் மண்ணும் அழியும்—இது விபரீதக் குழந்தை என்று கூறினான், மருத்துவத் தேவன். விபத்து நேரிடாதிருக்க, கடவுளின் குழந்தையை, மருத்துவக் கடவுள் கொன்று, இதயத்தைப் பிளந்துபார்க்க, அதிலே மூன்று பாம்புகள் இருந்தனவாம்! இவை வளர்ந்தால், தேவருலகும் மாந்தருலகும் அழிந்துபடும் என்று கூறி, பாம்புகளைக் கொன்று கொளுத்தி சாம்பலை ஆற்றிலே கொண்டுபோய் கரைக்க, நெருப்பாறாகிவிட்டதாம்! இப்படிப்பட்ட புராணங்களை, ட்ரூயிட்டுகள் கட்டிவிட்டனர், மக்கள் நம்பினர், கொட்டிக் கொடுத்தனர், காணிக்கையை, கட்டினர் பல கோயில்களை! எங்கே அந்தக் கோயில்கள்! இப்போதும் இங்கிலாந்து நாட்டிலே, காடுகளை அடுத்த மேடுகளிலே காட்டுவர் கற்கள் சிலவற்றை—இவைகள்தாம், ட்ரூயிட் காலக் கோயில்கள் என்று!

பிரிட்டன், அயர்லாந்து, பிரான்சு, அதை அடுத்த நாடுகள், இவ்வளவு பரந்த பூபாகத்திலே அரசோச்சி வந்தனர், அர்த்தமற்ற கதைகளைக் கட்டிவிட்டு, பாமரர் மனதிலே அச்சமூட்டி அடிமை கொண்ட ட்ரூயிட்டுகள்.

அவர்களின் புரட்டுரைகளில், பொருள் இல்லையே, கூறப்படும் கதைகளிலே, மனித குல மேம்பாட்டுக்கான